நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாக திறக்கப்படுமா?
நெல் கொள்முதல் நிலையம் கூடுதலாக திறக்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
தேசிய அளவில் நெல் சாகுபடி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று பரவலாக பேசப்பட்டாலும், தமிழகத்தை பொருத்தமட்டில் நெல் சாகுபடி என்பது பாரம்பரியமாகவே நடந்து வருகிறது. அதிலும் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் பாரம்பரிய நெல் சாகுபடி செய்யப்பட வேண்டும் என்று ஊக்குவித்து வந்தார்.
நெல் சாகுபடி
அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் பாரம்பரிய நெல் சாகுபடி பரவலாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மாவட்டத்தின் மேற்கு பகுதியிலும், கிழக்கு பகுதியிலும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
கிழக்கு பகுதியில் மழையை நம்பியும், ஒரு சில பகுதிகளில் கிணற்று பாசனத்தாலும் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தின் மேற்கு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலும் மற்றும் இதர பகுதிகளிலும் கண்மாய் பாசனம் மற்றும் இரவை பாசனத்தில் நெல் சாகுபடி நடந்து வருகிறது.
பொருளாதார ரீதியில் பாதிப்பு
தற்போதைய நிலையில் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் கண்மாய் பாசனம் மற்றும் இரவை பாசனம் மூலம் நெல் சாகுபடி நடந்துள்ளது. மாவட்டத்தின் மேற்கு பகுதியில் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ளது. வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெல் அறுவடை தொடங்கி விட்டது.
ஆனால் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் நரிக்குடி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினால் நெல் சாகுபடியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெருமளவு பொருளாதார ரீதியில் பாதிக்கப்படும் நிலை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மகசூல் இல்லை
மாவட்டத்தின் கிழக்கு பகுதியை ஒட்டி உள்ள பகுதியில் வைகை கால்வாய் மூலம் பாசன வசதி செய்து தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வரும் நிலையிலும் அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாத நிலையில் ஆண்டுதோறும் நெல் சாகுபடி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதற்கான வழிமுறைகளை விவசாயத்துறையினர் தெரிவித்து வருவதாக கூறப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் உள்ள அளவிற்கு மாவட்டத்தில் நெல் சாகுபடியில் அதிகமாக மகசூல் கிடைக்காத நிலை உள்ளது.
கொள்முதல் விலை
மத்திய,மாநில அரசுகள் நெல் கொள்முதலுக்கு அதிக விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வந்தாலும் தமிழகத்தில் மாநில அரசு குவிண்டாலுக்கு ஏ கிரேடு நெல் ரூ.2,060-ம், ஊக்கத்தொகை ரூ.100-ம் சேர்த்து ரூ. 2,160-க்கு கொள்முதல் செய்யப்படும்.
பொது ரகம் குவிண்டால் ரூ.2,040-ம், ஊக்கத்தொகை ரூ. 75-ம் சேர்த்து ரூ.2,115-க்கு கொள்முதல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள மாநிலத்தில் குவிண்டால் ரூ.2,600-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. கேரள அரசு நெல் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் அளவிற்கு தமிழகத்தில் விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கிடைக்கவில்லை என்று புகார் கூறும் நிலையும் உள்ளது. இதில் அரசு கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் வெளிச்சந்தையில் வியாபாரிகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய பரிதாப நிலையும் ஏற்படுகிறது.
16 ெகாள்முதல் நிலையங்கள் திறப்பு
எனவே அரசு அறுவடைக்கு முன் அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவிற்கு கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தை பொருத்தமட்டில் மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அறுவடை தொடங்கி விட்ட நிலையில் இதுவரை 16 கொள்முதல் நிலையங்களே திறக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 32 கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. ஆனாலும் மாவட்ட நிர்வாகம் தேவையான அளவுக்கு கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும் என்று உறுதி அளித்து இருந்தாலும் தாமதப்படுத்தாமல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்கள் நுகர் பொருள் வாணிபக் கழகத்தால் கண்காணிக்கப்படுகிறது.
இயற்கை பேரிடர்
கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதலுக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கொள்முதலுக்கான நெல் 17 சதவீதம் ஈரப்பதம், கரிம பொருள் 1 சதவீதம், கனிமப் பொருள் 1 சதவீதம், சேதமடைந்தது, நிறம் கெட்டது, முளைகட்டியது, பூச்சிகளால் தாக்கப்பட்டது என 5 சதவீதம், முதிராதது சுருங்கி விட்டது, மடிப்பு ஏற்பட்டு குறுகியது என 3 சதவீதம், கீழினக்கலப்பு 6 சதவீதம் என கொள்முதல் செய்யப்படும் என நுகர் பொருள் வாணிப கழகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தரப்பில் மூடைக்கு ரூ. 60 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதலுக்கு கொண்டு செல்லப்படும் நெல் உடனடியாக எடை போடப்பட்டு கொள்முதல் செய்யப்படாமல் அங்கே குவித்து வைத்திருக்கும் நிலையில் மழை போன்ற இயற்கை பேரிடர்களால் சேதமடையும் நிலையும் ஏற்படுகிறது. இவை தவிர்க்கப்பட வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிவாரணம்
இதுகுறித்து விவசாய சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-
தமிழ்நாடு விவசாய சங்க மாநில நிர்வாகி விஜயமுருகன்:-
மாவட்டத்தின் மேற்கு பகுதியில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படாத நிலையில் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் அதிலும் குறிப்பாக நரிக்குடி, திருச்சுழி பகுதிகளில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நரிக்குடியை ஒட்டி உள்ள கடலாடி, கமுதி தாலுகாக்களில் வறட்சி பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் போராடும் நிலை ஏற்பட்டுவிட்டது. அதேநிலை தான் நரிக்குடி, திருச்சுழி பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. எனவே நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் நிலையில் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். நெல் அறுவடை தொடங்கிவிட்ட நிலையில் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்தபடி கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாசன வசதி
தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி:-
நரிக்குடியை ஒட்டி உள்ள வைகை கால்வாயில் இருந்து அப்பகுதி விவசாயிகளுக்கு பாசன வசதி செய்து தரப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படாத நிலை உள்ளது. அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டால் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்வதற்கு வசதியாக இருக்கும். மேலும் தேவைப்படும் அளவிற்கு நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெல் கொள்முதல் நிலையங்களிலும் உடனடியாக விவசாயிகளை காத்திருக்க வைக்காமல் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் குவித்து வைக்கப்பட்டு மழை போன்ற இயற்கை பேரிடர் பாதிப்பு ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலர்களம்
வத்திராயிருப்பு விவசாயி கோவிந்தன்:-
வத்திராயிருப்பு தாலுகா பகுதியில் எண்ணற்ற இடங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்த பகுதியில் நெல்லை உலர வைக்க உலர்களம் இல்லை. அதேபோல வத்திராயிருப்பு பகுதியில் அறுவடை தொடங்கிய உடன் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் தொடங்குவதற்கு ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் மிகுந்த போராட்டத்தை சந்தித்து தான் கொள்முதல் நிலையத்தை திறக்கின்றனர்.
இதனால் விவசாயிகள் தனியார் வியாபாரிகளை நாடிச் செல்ல வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகி விவசாயிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். வத்திராயிருப்பு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து இப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெல் உலர்களம் மற்றும் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே மாவட்ட நிர்வாகம் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வத்திராயிருப்பு பகுதியில் போதிய நெல் உலர்களம் மற்றும் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
23 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி
வேளாண் இணை இயக்குனர் உத்தண்டராமன்:-
விருதுநகர் மாவட்டத்தில் நெல் சாகுபடி நடப்பாண்டில் 28 ஆயிரம் ஹெக்டேர் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை 23 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி நடந்துள்ளது. மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அறுவடை தொடங்கிவிட்ட நிலையில் கிழக்கு பகுதியில் நரிக்குடி, திருச்சுழியை ஒட்டிஉள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கொள்முதல் நிலையங்களை பொருத்தமட்டில் தேவைப்படும் அளவுக்கு திறக்கப்படும்.
இதில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டில் மாவட்டத்தில் 90 ஆயிரம் குவிண்டாலுக்கு மேல் நெல் மகசூல் கிடைத்துள்ளது. நடப்பாண்டிலும் இதனை ஒட்டி மகசூல் கிடைக்க வாய்ப்பு உள்ளது.