குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?
மூங்கில்துறைப்பட்டு அருகே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்கின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு
மூங்கில்துறைப்பட்டு அருகே வடக்கீரனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து அருளம்பாடி கிராமம் செல்லும் மண் சாலை உள்ளது. பஸ் நிறுத்தத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தங்கள் நிலத்தில் அறுவடை செய்த கரும்பு, நெல், மணிலா, உளுந்து, மக்காச்சோளம், கேழ்வரகு உள்ளிட்ட தானியங்களை மண் சாலை வழியாகத்தான் வெளியூர் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் மண் சாலை குண்டும், குழியுமாக மாறி விட்டது. மழைக்காலங்களில் மழைநீா் தேங்கி சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது.
வேறு மாற்றுவழி இல்லாததால் வயதான முதியோர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்பட்டு இந்த சாலையை கடந்து சென்று வருகிறார்கள். வாகனங்கள் வந்தால் சேற்றில் சிக்கிக்கொள்கிறது. இதற்கு அஞ்சியே சில வாகன ஓட்டிகள் கிராமத்துக்குள் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனால் சாலையை சீரமைக்கக்கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண் சாலையில் ஜல்லிகள் கொட்டப்பட்டன. ஆனால் சாலை சீரமைக்க வில்லை. மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறி விடுவதால் நடந்தோ அல்லது வாகனங்களில் செல்லவோ மிகவும் சிரமமாக உள்ளது. இப்பகுதிகளில் சாகுபடி செய்யும் கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களை அறுவடை செய்து வாகனங்களில் கொண்டு செல்லவும் முடியாத நிலை உள்ளது. இதனால் சில நேரங்களில் மன அழுத்தம் ஏற்பட்டு பயிர் சாகுபடியை நிறுத்தி விடலாமா என்ற எண்ணம் உருவாகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் அடிக்கடி விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருவதோடு, வாகனங்களில் உள்ள டயர் பஞ்சர் ஆகி வீண் செலவு ஏற்படுகிறது. இதனால் ஆத்திர அவசரத்துக்கு கார், ஆட்டோ போன்ற வாகன ஓட்டிகள் கிராமத்துக்குள் வர மறுக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.