ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா?
கொள்ளிடம் அருகே அளக்குடியில் ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா். மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்;
கொள்ளிடம் அருகே அளக்குடியில் ஆற்றங்கரை நிரந்தரமாக பலப்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனா். மேலும் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கான்கிரீட் தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆற்றங்கரையில் உடைப்பு
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆறு செல்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றின் வலது கரையில் தண்ணீர் சென்று மோதும் இடத்தில் கட்டப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவரில் சுமார் 200 மீட்டர் தூரத்துக்கு உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கிராமத்துக்குள் நுழைய தொடங்கியது. இதைத்தொடர்ந்து நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து உடைப்பு ஏற்பட்ட பகுதியில் கருங்கற்கள் பனை மரங்களை கொண்டு தற்காலிகமாக அடைத்தனர்.இதன்பின் கடந்த வருடம் அக்டோபர் மாதம் மேலும் கொள்ளிடம் ஆற்றில் நீர் வரத்து அதிகமானதால் மீண்டும் அதே இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மீண்டும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு சென்று கரையை பலப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் கரையை பலப்படுத்தும் பணி நிறைவு பெறவில்லை.
ரூ.6 கோடியில்...
இந்நிலையில் மீண்டும் தற்பொழுது உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ரூ. 6 கோடி மதிப்பில் லாரிகளில் கருங்கல் எடுத்துவரப்பட்டு தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. 200 மீட்டர் தூரத்துக்கு உடைந்து தகர்ந்த கான்கிரீட் தடுப்பு சுவருக்கு பதிலாக கருங்கல் ஜல்லிகள் போட்டு அடைக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் நிரந்தரமாக கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை.எனவே அளக்குடியில் கொள்ளிடம் ஆற்றின் வலது கரையை பலப்படுத்தும் வகையில் நிரந்தரமாக 200 மீட்டர் தூரத்துக்கு கான்கிரீட் தடுப்பு சுவர் கட்ட வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.