ஏத்தநாடு கண்மாய் மதகுகள் சீரமைக்கப்படுமா?


ஏத்தநாடு கண்மாய் மதகுகள் சீரமைக்கப்படுமா?
x

475 ஏக்கர் பாசன வசதி இல்லை. வயல்களில் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்துள்ளதால் ஏத்தநாடு கண்மாய் மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

ஏத்தநாடு கண்மாய்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏத்தநாடு கண்மாய் உள்ளது. இப்பகுதி மக்களின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக உள்ளது. சுமார் 3½ கிலோமீட்டர் நீளமும், 1½ கிலோ மீட்டர் அகலமும் கொண்ட ஏத்தநாடு கண்மாயில் 8 மதகுகள் உள்ளன. பழுதடைந்த நிலையில் இருந்த 8 மதகுகளில் 6 மதகுகள் சரி செய்யப்பட்டு விட்டன.

போதுமான அளவு நிதி இல்லாததால் 7, 8 மேலமடை, குருந்தடி ஆகிய இரண்டு மதகுகள் சரி செய்யப்படாமல் முழுவதும் சிதிலம் அடைந்த நிலையில் நீர் செல்லும் பாசன வாய்க்கால்களும் சீரமைக்கப்படாமல் உள்ளது. பாம்பாற்றில் இருந்து வரும் தண்ணீர் நெடுங்குடி அணைக்கட்டு நிரம்பிய பிறகு ஏத்தநாடு கண்மாயை வந்தடையும்.

6 மதகுகள் சரிசெய்யப்பட்டன

மேலமடை, குருந்தடி மதகுகள் ஆகிய இரண்டும் சிதிலமடைந்து கிடப்பதால் சுமார் 475 ஏக்கருக்கு மேல் பாசனம் வசதி பெறும் வயல்கள் பாசன வசதி இல்லாமல் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து காடுகளாக காட்சியளிக்கின்றது. 50-க்கும் குறைவான ஏக்கர் மட்டுமே தற்போது ஆழ்குழாய் கிணறு மூலம் விவசாயம் செய்யப்படுகின்றது.

இந்த மதகுகள் 1988-ம் ஆண்டு பொருளாதார திட்டத்தின் கீழ் செப்பனிடப்பட்டது. அதன் பின் ஏத்தநாடு கண்மாயில் உள்ள 6 மதகுகள் சரி செய்யப்பட்டது. ஆனால் மேலமடை, குருந்தடி ஆகிய 2 மதகுகளை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

முழுமையாக சீரமைக்கவில்லை

மேலும் கண்மாயை தூர்வாரி மதகுகளை சரி செய்ய போதுமான நிதியை பெற்று ஏத்தநாடு கண்மாயை முழுமையாக சீரமைக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

ஏத்தநாடு கண்மாய் நிரம்பிய பின்பு உபரி நீர் முடுக்கிகண்மாய், அன்புராணி கண்மாய், கரையபட்டி கண்மாய், மேலவயல் கண்மாய், கப்புடான் கண்மாய், சிறுகுறிச்சி நீர் ஓடை, பன்னீர்பட்டி கண்மாய், மாப்பிள்ளை கண்மாய் உள்ளிட்ட பல்வேறு கண்மாய்கள் நிரம்பி சங்கிலி தொடர் போல் இணைப்புள்ள ஏம்பல், இருபாநாடு ஆகிய ஊராட்சிகள் வரை இந்த நீர் செல்லும். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியநாட்டுத் கண்மாய்களில் ஏத்தநாடு கண்மாயும் ஒன்று. மிகப்பெரிய பாசன வசதியும் சங்கிலி தொடர் போன்ற குளம் மற்றும் கண்மாய்கள் அமைந்துள்ள ஏத்தநாடு கண்மாய் மதகுகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோரிக்கை

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், குருந்தடி மதகில் இருந்து செல்லும் வரத்து வாய்க்கால் முழுவதும் இடிந்து விழுந்து வரத்துவாய்க்கால் மூடி கிடக்கின்றது. குறைந்த அளவே நிலம் வைத்து விவசாயம் செய்து பிழைத்து வரும் இப்பகுதி மக்களுக்கு மதகுகளை உடனடியாக சீர் செய்யாவிட்டால் தற்போதைய நிவாரணமாக ஆழ்குழாய் கிணறு அமைத்து இலவச மின்சாரம் கொடுத்தால் இப்பகுதியில் உள்ள சிறு குறு விவசாயிகள் விவசாயம் செய்ய வாய்ப்பாக இருக்கும். எனவே இந்த தொகுதி அமைச்சர், மாவட்ட கலெக்டர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கண்மாய் மதகுகளை சீர் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story