பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா? தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு


பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா? தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
x

பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா? என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

புதுக்கோட்டை

பொற்பனைக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் சார்ந்த இடங்கள் அதிகமாக உள்ளன. மேலும் தொன்மை வாய்ந்த பொருட்களும், கல்வெட்டுகளும் அவ்வப்போது தொல்லியல் ஆர்வலர்கள் களப்பயணம் மேற்கொள்ளும் போது கிடைக்கிறது. இதில் புதுக்கோட்டையை அடுத்த பொற்பனைக்கோட்டை பகுதியும் ஒன்றாகும். நிர்வாக அமைப்பு கொண்ட இந்த பகுதியில் சங்க காலத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த இடத்தில் சமீபத்தில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தினர் அகழாய்வு பணி மேற்கொண்டனர். இதேபோல் புதுக்கோட்டையை சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்களும் களப்பயணம் செய்தனர். இதில் பழமையான ஓடுகள், தமிழர்களின் அடையாளங்களாக கருப்பு, சிவப்பு வர்ணம் பூசப்பட்ட பானை ஓடுகள், வளையல்களின் உடைந்த பாகங்கள், மணிகள், தட்டு, கிண்ணம், கலயங்கள் உடைந்த பாகங்கள், சிறிய இரும்பு ஆயுதம், உலோக கழிவுகள் போன்றவை மேலோட்டமாக ஆய்வு செய்யும் போது கிடைத்தது.

அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளுமா?

இந்த நிலையில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தினர் ஆய்வுக்கு பின் பணிகள் எதுவும் நடைபெறாமல் உள்ளது. தென் தமிழகத்திலேயே எங்கும் கிடைக்காத அரிய வகை பொருட்கள் பொற்பனைக்கோட்டையில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று கூறப்படுகிறது. இதனால் கீழடி, ஆதிச்சநல்லூரில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்படுவது போல் பொற்பனைக்கோட்டையிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர். மேலும் தமிழக அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் தொல்லியல் கழகத்தின் மாநாடு இன்று (சனிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டில் பொற்பனைக்கோட்டை அகழாய்வு பணியை தமிழக அரசு மேற்கொள்ளும் என அறிவிப்பு வெளியாகுமா? என எதிர்பார்த்துள்ளனர்.

1 More update

Next Story