கரூர் ஐந்துரோட்டில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுமா?


கரூர் ஐந்துரோட்டில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுமா?
x

கரூர் ஐந்துரோட்டில் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கரூர்

போக்குவரத்து நெரிசல்

கரூர் நகரில் உள்ள முக்கிய பகுதிகளில் ஒன்று ஐந்துரோடு. பசுபதிபாளையம், நெரூர், வாங்கல், அரசு காலனி, திருமுக்கூடலூர், புலியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டுமானால் ஐந்துரோடு பகுதியை தாண்டித்தான் செல்ல வேண்டும்.

இந்த பகுதியில் இருந்து முக்கியமான நான்கு சாலைகள் பிரிந்து செல்கின்றன. மேலும் ஒரு தெருவும் பிரிந்து செல்கிறது. இதனால் இப்பகுதி எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்தும் காணப்படுகிறது.

சாலை பணி தொடங்கவில்லை

அதிலும் காலை நேரங்களில் பள்ளி, அலுவலகங்களுக்கு செல்பவர்களும், மாலை நேரங்களில் வீட்டிற்கு திரும்ப வருபவர்களும் இச்சாலையை அதிகம் பயன்படுத்துவதால் அந்த சமயங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் சாலையை மேம்படுத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

அதன்காரணமாக கரூரில் இருந்து செல்லும் சாலையில் இருந்த மையத்தடுப்பு அகற்றப்பட்டது. ஆனால் அந்த சாலை பணிகளும் தொடங்கவில்லை. மையத்தடுப்பும் இருந்த இடத்தில் வைக்கவில்லை. இதனால் பலர் சாலையில் குறுக்கும், நெடுக்குமாக செல்கின்றனர்.

இதுகுறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் அளித்த கருத்துகள் பின்வருமாறு:-

விபத்துகள் குறையும்

டீக்கடை உரிமையாளர் சந்தோஷ்குமார்:-

இந்த சாலை வழியாக தான் நான் தினமும் சென்று வருகிறேன். இங்கு எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. இதனால் சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்க அனைத்து சாலைகளிலும் வேகத்தடைகளோ அல்லது போக்குவரத்து சிக்னலோ அமைக்க வேண்டும். அவ்வாறு அமைக்கப்பட்டால் இங்கு விபத்துகளும் குறையும். நேர விரயமும் குறையும்.

வாழ்வாதாரம்

தள்ளுவண்டியில் காய்கறி விற்கும் சண்முகநதி:-

சுமார் 27 வருடங்களாக இப்பகுதியில் தான் வசித்து வருகிறேன். இங்கு விபத்துகள் அதிக அளவில் ஏற்படுவதில்லை. ஆனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. சாலையை கடந்து செல்லகூட பயமாக உள்ளது. இதற்கு தீர்வாக இப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் அமைப்பதே ஒரே வழி. ஆனால் அவ்வாறு அமைக்கும்போது இப்பகுதியில் சாலையோரங்களில் கடை வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாதவாறு சிக்னல் அமைக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்.

அடிக்கடி விபத்து

கோவில் ஊழியர் செந்தில்குமார்:-

இந்த சாலை முக்கிய சாலையாகும். காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் இச்சாலையில் வாகனங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. யாரும் விதிகளை மதித்து வாகனங்களை ஓட்டுவதில்லை. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.

சாலைகளின் நடுவே மையத்தடுப்போ அல்லது வேகத்தடையோ அமைக்கப்பட்டால் அனைவரும் மெதுவாக வந்து செல்வார்கள். அவ்வாறு இல்லாததால் வாகன ஓட்டிகள் குறுக்கும், நெடுக்குமாக வந்து செல்கின்றனர். இதனை தடுக்க இப்பகுதியில் போக்குவரத்து சிக்னலோ அல்லது வேகத்தடைகளோ அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இப்பகுதியில் நிழற்குடை வசதியும் ஏற்படுத்தி தந்தால் பொதுமக்கள் அனைவரும் பயனடைவர்.

பாதசாரிகளுக்கு உதவி

ராயனூரை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் சக்திவேல்:-

இங்கு போக்குவரத்து நெரிசல் என்பது சாதாரண விஷயம் தான். ஆனால் பெரிய அளவில் விபத்துகள் ஏதும் நிகழாது.

சிலர் விதிகளை மதிக்காமல் சாலைகளின் குறுக்கே செல்வதால் சில நேரங்களில் சண்டை, சச்சரவுகள் வரும். இங்கு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டால் சாலையை கடந்து செல்லும் பாதசாரிகளுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story