தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?


தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா?
x

தமிழக பட்ஜெட்டில் இனிப்பான அறிவிப்புகள் இருக்குமா? என பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

புதுக்கோட்டை

தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டுக்கான பொது 'பட்ஜெட்'டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வருகிற 20-ந் தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்கிறார். இதில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் விரும்பும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இருக்குமா? என்று ஆவலோடு காத்து இருக்கிறார்கள். அதுபற்றிய கருத்துகள் வருமாறு:-

நறுமண தொழிற்சாலை

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழக செயலாளர் சவரிமுத்து:- தமிழக அரசின் பட்ஜெட்டில் வணிகர்கள் எதிர்பார்க்கக்கூடியது வரியினங்கள் குறைப்பு தான். மாநில அரசின் வரிவிதிப்புகளை குறைத்தால் பயனுள்ளதாக இருக்கும். புதுக்கோட்டையில் முந்திரி பருப்பு தொழில் முக்கியமாக இருப்பதால் அரசு சார்பில் அத்தொழில் சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும். இதேபோல் மாவட்டத்தில் பூக்கள் உற்பத்தி அதிகமாக இருப்பதால் நறுமண தொழிற்சாலை அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். பலாப்பழ தொழிலை மேம்படுத்தும் வகையில் அறிவிப்புகள் வந்தாலும் நல்லது தான்.

புதுக்கோட்டையில் சிப்காட்டில் பல நிறுவனங்கள் செயல்படாமல் உள்ளது. இதனால் புதுக்கோட்டை புதிய தொழிற்சாலை அமைக்க ஏதேனும் அமைக்க அறிவிப்பு வெளியாக வேண்டும். இதன்மூலம் பலர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக மாற்றுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

வேலைவாய்ப்பு

திருமயம் பகுதியை சேர்ந்த பட்டதாரி வாலிபர் முகமது ஹாரிஸ்:- புதுக்கோட்டை மாவட்டத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் அறிவியல் சார்ந்த கல்லூரிகள் உள்ளன. இங்கு படித்த மாணவ-மாணவிகள் தற்போது வேலையில்லாமல் அரசு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்பகுதியில் தொழிற்சாலைகள் அதிகளவில் இல்லாத காரணத்தினால் பலர் கிடைக்கும் வேலைக்கு சென்று குறைந்த வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். தற்சமயம் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படித்த இளைஞர்களுக்கு அவர்களது படிப்புக்கு ஏற்ப தொழிற்சாலைகள் அமைத்துக் கொடுத்து அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் படித்து முடித்து வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும். அதற்கான திட்டங்களுக்கான அறிவிப்பினை அறிவிக்க வேண்டும்.

காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரெங்கசாமி:- இந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு துறையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஈட்டிய விடுப்பு தொகையை வழங்க வேண்டும். அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைய உள்ளது. இதில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்.

அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள்

கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த முன்னாள் ஆசிரியர் துரை.ரெத்தினம்:- புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்கள் அனைத்தும் சிறப்பு திட்ட நிதி ஒதுக்கீடு மூலமாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இதேபோல் புதிய கட்டிடங்களை கட்டி பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை வரவழைக்கும் புதுப்புது திட்டங்களை வகுக்க வேண்டும்.

அரசு கலைக்கல்லூரி

விராலிமலை ஒன்றியம், மண்டையூரை சேர்ந்த ஜெயந்தி:- புதுக்கோட்டை மாவட்டத்தில் குறிப்பாக கிராமப்புறங்களில் அரசு பஸ்களின் சேவையை அதிகப்படுத்த வேண்டும். காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்த கூடுதல் கல்லூரிகளை கொண்டு வர வேண்டும். மேலும் விராலிமலையில் அரசு கலைக்கல்லூரியை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்களின் உடல் நலத்தை பேணுவதற்கு கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவை. குறிப்பாக மக்கள் தொகை அதிகமுள்ள மாத்தூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வர அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச பட்டா வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகப்படியான நிதியினை வழங்கி செயல்பட வேண்டும். அப்போதுதான் கிராமப்புறங்களில் முன்னேற்றங்கள் மேம்படும்.

கல்வி கடன் தள்ளுபடி

விராலிமலையைச் சேர்ந்த மணிகண்டன்:- இந்த பட்ஜெட்டில் கல்வி கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பை கல்லூரி மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதேபோல் வேலைக்கு செல்லும் இளைஞர்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி அடைந்த அளவுக்கு தொழிலாளர்கள் வளர்ச்சி அடைந்துள்ளார்களா, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா, உயர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்றவர்களின் வேலைவாய்ப்புகள் தொழில் வாய்ப்புகளோடு இணைந்து செல்கின்றனவா என்பன உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாக ஆராய்ந்து தொழில் வளர்ச்சி - தொழிலாளர் நலன் என இரண்டும் ஒருங்கிணைக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ரொப்போ வட்டி விகிதத்தை பல முறை உயர்த்தியது. இதன் காரணமாக அனைத்து வகையிலான வங்கிக்கடன் வட்டியும் கணிசமாக அதிகரித்தது. மற்றக்கடன்களை விடவும் வீட்டுக்கடன் நீண்ட காலக் கடன் என்பதால் ரெப்போ வட்டி உயர்வு அதிக பாதிப்பை தந்துள்ளது. எனவே அது தொடர்பான சலுகைகள் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story