மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா?-தேவூர் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு
மேட்டூரில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுமா? என்று தேவூர் பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தேவூர்:
45 ஆயிரம் ஏக்கர் பாசனம்
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாயில் திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கால்வாய் பகுதிகளில் பாசனத்திற்காக ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
இந்த கால்வாய் பாசன தண்ணீரை பயன்படுத்தி தேவூர் பகுதி விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வந்தனர். மேட்டூர் கிழக்கு கரை கால்வாய், தேவூர் அருகே பொன்னம்பாளையம், மூலப்பாதை, குள்ளம்பட்டி, செட்டிபட்டி, கள்ளம்பாளையம், அம்மாபாளையம், புதுப்பாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக கடந்து நாமக்கல் மாவட்டம் குப்பாண்டபாளையம் வெப்படை பகுதி வரை சென்று காவேரி ஆற்றில் கலக்கிறது.
பயிர்கள் கருகி வருகின்றன
மேலும் கிழக்கு கரை கால்வாயின் கிளை வாய்க்கால் பகுதிகளான தண்ணிதாசனூர், ஒக்கிலிப்பட்டி, வட்ராம்பாளையம், சென்றாயனூர் பெரமச்சிபாளையம், நல்லங்கியூர் சோழக்கவுண்டனூர், மேட்டுபாளையம் கைகோளபாளையம், பாலிருச்சம்பாளையம், சுண்ணாம்புகரட்டூர் பாசன பகுதிகளில் இந்த ஆண்டு அதிக அளவில் கரும்பு, மஞ்சள், பருத்தி, சோளம், கத்தரி, வெண்டை, மக்காச்சோளம் உள்ளிட்டவை சாகுபடி செய்துள்ளனர், மேலும் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகள் அதிக அளவில் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மேட்டூர் அணையில் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் இதுவரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடவில்லை. இதனால் கால்வாய் பகுதி தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. கிணற்றில் நீர் மட்டம் குறைந்து விவசாய பயிர்களுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் நிலக்கடலை, சோளம், கரும்பு உள்ளிட்ட பயிறுகள் கருகி வருகின்றன.
தண்ணீர் திறக்கப்படுமா?
தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி இருப்பதால் கால்நடைகளின் தேவைக்காகவும், கருகி வரும் பயிர்களுக்கு தண்ணீர் தேவைக்காகவும் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மேற்கு கரை கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுமா? என தேவூர் பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.