குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன்பொதுமக்கள் சாலை மறியல்
திவான்சாபுதூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஆனைமலை
திவான்சாபுதூர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குடிநீர் தட்டுப்பாடு
ஆனைமலையை அடுத்த திவான்சாபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட வளர்ந்தாய்மரத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு பொன்னால மன்துறை கூட்டுக் குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சுமார் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வளர்ந்தாய்மரத்தில் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் முறையாக பதில் அளிக்கவில்லை என்று தெரிகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலை 9 மணியளவில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கு சுமார் 2 மாதங்களுக்கு மேலாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து நிர்வாகத்தினரிடம் கேட்டால், பொன்னாலம்மன் துறையில் உள்ள பம்பு ஹவுசில் உள்ள மோட்டார் பழுதடைந்துள்ளதாகவும், குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் மின்தடை காரணமாகவும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறுகின்றனர். குடிநீர் தட்டுப்பாடால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போக்குவரத்து பாதிப்பு
அதற்கு ஊராட்சி நிர்வாகத்தினருடன் பேசி, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சாலை மறியல் காரணமாக சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.