மகளுடன், பெண் தீக்குளிக்க முயற்சி


மகளுடன், பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:46 PM GMT)

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் ஒருவர் மகளுடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். இந்த நிலையில் 10 வயது மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு பெண் ஒருவர் வந்தார். அவருடைய கையில் கட்டைப்பை ஒன்று இருந்தது. கலெக்டர் அலுவலகம் முன்பு வந்ததும் அந்த பெண், தான் வைத்திருந்த கட்டைப்பையில் இருந்த பெட்ரோல் கேனை வெளியே எடுத்தார். பின்னர் திடீரென அதில் இருந்த பெட்ரோலை மகள் மீது தெளித்துவிட்டு தனது உடலில் ஊற்ற முயன்றார். இதைப்பார்த்த போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணிடம் இருந்த பெட்ரோல் கேனை பிடுங்கினர். பின்னர் அதில் இருந்த பெட்ரோலை கீழே கொட்டி அழித்தனர்.

அதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர், கன்னிவாடியை அடுத்த ஆலந்தூரான்பட்டியை சேர்ந்த வீரமணி மனைவி ஜெயந்தி மாலா என்று தெரியவந்தது. போலீசாரிடம் அவர் கூறுகையில், குடிநீர் பிரச்சினைக்காக என்னுடைய கணவர் பொதுமக்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தார். அதன்பிறகு அரசியல் கட்சியினர் தூண்டுதலின் பேரில், எனது கணவர் மீது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தேன் என்றார். பின்னர் அவரை எச்சரித்த போலீசார், விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். மகளுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story