குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்பொதுமக்கள் சாலை மறியல்
x

குன்னத்தில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெரம்பலூர்

சாலை மறியல்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் கிராமத்தில் அரியலூர்- பெரம்பலூர் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியின் எதிரே 2-வது வார்டுக்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குன்னம் ஊராட்சி சார்பில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்துள்ளனர். மேலும் இப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைக்கு போதுமான தண்ணீர் இன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த இப்பகுதி மக்கள் நேற்று இரவு அரியலூர்- பெரம்பலூர் நெடுஞ்சாலையில் தனியார் வங்கி எதிரில் காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், குன்னம் ஊராட்சி மன்ற தலைவர் தனலட்சுமி மதியழகன், ஊராட்சி செயலாளர் ரவி மற்றும் குன்னம் போலீசார், வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் அப்பகுதி மக்களுக்கு இன்று (சனிக்கிழமை) முதல் தண்ணீர் லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அரியலூர்- பெரம்பலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story