காளையார்கோவில் அருகே நகைக்காக மூதாட்டியை கொன்ற பெண் கைது


காளையார்கோவில் அருகே நகைக்காக மூதாட்டியை கொன்ற பெண் கைது
x
தினத்தந்தி 5 Oct 2023 7:15 PM GMT (Updated: 5 Oct 2023 7:15 PM GMT)

காளையார்கோவில் அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை

காளையார்கோவில்,


மூதாட்டி கொலை

காளையார்கோவில் அருகே கொல்லங்குடி வேளாண் தெருவை சேர்ந்தவர் லட்சுமி.(வயது 70) இவர் கடந்த 3-ந் தேதி மாலை தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த நகைகளையும், காதில் அணிந்திருந்த தோடுகளையும் மர்ம நபர் திருடி சென்று விட்டதாக காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் கணேசன் மூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

இந்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபி சவுந்தர்யன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இந்நிலையில் மூதாட்டியின் அருகிலுள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று 35 வயது மதிக்கத்தக்க சுடிதார் அணிந்த பெண் ஒருவர் மூதாட்டியின் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.

பெண் கைது

அதன் அடிப்படையில் விசாரணை செய்த போது கொல்லங்குடி அருகே உள்ள விட்டனேரி கிராமத்தைச் சேர்ந்தவரும், கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவியுமான ராணி (38) என்பவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் சம்பவத்தன்று ராணி, மூதாட்டி லட்சுமி வீட்டிற்கு சென்று முதியோர் உதவித்தொகை மற்றும் மகளிர் உரிமைத்தொகை வாங்கித் தருவதாக கூறி சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கவே லட்சுமி சென்று தண்ணீர் எடுக்க சென்றபோது பின்பகுதியில் இருந்து கழுத்தில் அணிந்து இருந்த 17 பவுன் செயின்களை பிடித்து அறுத்துள்ளார்.

இதில் எதிர்பாராத விதமாக லட்சுமி கீழே விழுந்தவுடன் ராணி அவர் மீது ஏறி உட்கார்ந்து தாக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. மூதாட்டியை தாக்கி பட்டப்பகலில் நகையை கொள்ளையடித்துச் சென்ற பெண்ணை 2 நாளில் கண்டுபிடித்து கைது செய்த காளையார் கோவில் இன்ஸ்பெக்டர் கணேச மூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் குகன் ஆகியோரை சிவகங்கை துணை சூப்பிரண்டு சிபி சவுந்தர்யன் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

மற்றொரு நகை திருட்டில் தொடர்பு

கடந்த ஆகஸ்டு மாதம் 16-ந்தேதி திருவேகம்பத்தூர் அருகே உள்ள ஆலம்பக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தனியாக வசித்து வரும் புஷ்பம் (60) என்பவரது வீட்டில் துக்கம் விசாரிப்பதாக உள்ளே சென்று 4 ½ பவுன் நகையை ராணி திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நகை திருட்டு குறித்து திருவேகம்பத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர்.


Next Story