சின்னசேலம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்ற பெண் கைது: ஆவண எழுத்தர் உள்பட 4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சின்னசேலம் அருகே போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரிக்க முயன்ற பெண் கைது செய்யப்பட்டார். ஆவண எழுத்தர் உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சின்னசேலம்,
போலி ஆவணம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 66), விவசாயி. இவர் அதே ஊரை சேர்ந்த பச்சமுத்து மனைவி சின்னப்பொண்ணு மற்றும் லோகநாதன் மகன் ரமேஷ் ஆகியோரிடம் இருந்து 149¼ சென்ட் நிலத்தை கிரையம் பெற்று பட்டா மாற்றமும் செய்து, அந்த நிலத்தை பயன்படுத்தி வருகிறார். இந்தநிலையில் சின்னப்பொண்ணுவின் மருமகளான சின்னசேலம் விஜயபுரம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் மனைவி மணிமேகலை (39) என்பவர் மேற்கண்ட சொத்துக்களை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கடந்த 2008-ம் ஆண்டு உயில் எழுதப்பட்டதாக போலியாக ஆவணம் ஒன்றை தயாரித்து வைத்துக் கொண்டு கோவிந்தராசு மீது கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெண் கைது
அதைத்தொடர்ந்து கோவிந்தராசு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி, போலி ஆவணம் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் போலியான ஆவணம் தயாரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய சின்னசேலம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்அடிப்படையில் நிலத்தை அபகரிப்பதற்காக போலியான ஆவணம் தயாரித்ததாக பாலசுப்பிரமணியம் மனைவி மணிமேகலை, திருச்சி திருவெறும்பூர் சார்பதிவாளர் அலுவலக முத்திரைத்தாள் விற்பனையாளர் பெரியசாமி, சின்னசேலம் அடுத்த வாசுதேவனூர் பழனி முத்து மகன் அய்யம்பெருமாள், பெரம்பலூர் மாவட்டம் பாண்டகப்பாடி முத்து மகன் துரைராஜ், சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலக மாவட்ட ஆவண எழுத்தர் பழனி ஆகிய 5 பேர் மீது சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிந்து, மணிமேகலையை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரை யும் வலைவீசி தேடி வருகிறார்கள்.