கணவருடன் பழகியவரை கத்தரிக்கோலால் குத்திய பெண் கைது
கழுகுமலையில் கணவருடன் பழகியவரை கத்தரிக்கோலால் குத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கழுகுமலை:
கழுகுமலை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 50). பெயிண்டர். தொழிலாளியான இவருக்கு முத்துமாரி (42) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். சிவசுப்பிரமணியன், கழுகுமலை பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று மதியம் முத்துமாரி மற்றும் அவருடன் 2 பெண்களும் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரமடைந்த முத்துமாரி, அந்த பெண்ணின் மீது மிளகாய் பொடி தூவி கத்தரிக்கோலால் கையில் குத்தினார். இதில் அந்த பெண் காயம் அடைந்தார். மேலும் முத்துமாரியுடன் வந்த 2 பெண்களும் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கினர். இதில் காயமடைந்த அந்த பெண், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் கழுகுமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து முத்துமாரியை கைது செய்தார். தப்பி சென்ற 2 பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.