சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை திருடிய பெண் கைது


சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை திருடிய பெண் கைது
x

வேலூர் அருகே சத்துணவு அமைப்பாளர் வீட்டில் நகை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

வேலூரை அடுத்த வெங்கடாபுரம் பிரியாநகரை சேர்ந்தவர்டக் ரவி (வயது 48), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (44) சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

கணவன்-மனைவியும் தினமும் காலை வேலைக்கு செல்லும்போது வீட்டை பூட்டுவிட்டு சாவியை மாடி படிக்கட்டின் கீழே வைப்பது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று ரவியும், லட்சுமியின் வழக்கம்போல் காலை வேலைக்கு சென்றனர். மாலையில் லட்சுமி வீட்டிற்கு வந்து பீரோவை திறந்து பார்த்தபோது 3¼ பவுன் நகை திருட்டு போயிருந்தது.

மர்மநபர்கள் வீட்டின் கதவு மற்றும் பீரோவை சாவி மூலம் திறந்து திருடியது தெரிய வந்தது.

இதுகுறித்து லட்சுமி சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கே.பிச்சாண்டி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார். அப்போது லட்சுமியின் வீட்டிற்கு அலமேலுமங்காபுரம் சம்பங்கிநல்லூரை சேர்ந்த பாலாஜி மனைவி வினோதினி (33) வந்து சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் சில நாட்களாக வீட்டை நோட்டமிட்டு நகை திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதைத்தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடமிருந்து 3¼ பவுன் நகையை போலீசார் மீட்டனர்.


Related Tags :
Next Story