படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை

படப்பை அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.
தந்தை வீட்டில் நகை
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வைப்பூர் காவல் கழனி கட்டபொம்மன் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). இவருடைய மனைவி மோகனா என்ற ராதிகா (37). பல்லாவரம் அடுத்த கோவிலாம்பாக்கம் ஈச்சங்காடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர். இவர்களுக்கு வர்ஷினி (3) என்ற மகள் உள்ளார். சுரேஷ் கடந்த 2020 -ம் ஆண்டு துபாய்க்கு வேலைக்கு சென்று விட்டு 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திரும்பி வந்தார்.
தன்னிடம் இருந்த 25 பவுன் நகைகளை பாதுகாப்பு காரணமாக ராதிகா தனது தந்தையின் வீட்டில் வைத்திருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் ராதிகாவிடம் கணவர் சுரேஷ் நகையை கேட்டார். இது குறித்து ராதிகா தனது தந்தையின் வீட்டுக்கு தகவல் தெரிவித்தார்.
தற்கொலை
இதனையடுத்து ராதிகாவின் தம்பி பொன்வேல் நகையை கொண்டு வந்து தனது சகோதரி ராதிகாவிடம் நேற்று முன்தினம் கொடுத்து விட்டு சென்றார். சிறிது நேரத்திலேயே தொலைபேசியில் ராதிகாவின் தந்தை துரையிடம் பேசிய சுரேஷ், ராதிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். மகள் இறந்த செய்தியை கேட்ட துரை தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மணிமங்கலம் போலீசார் ராதிகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து ஆர்.டி.ஒ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.






