சென்னை: வடமாநில செல்போன் திருடனை 1 கி.மீ தூரம் விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரி


சென்னை: வடமாநில செல்போன் திருடனை 1 கி.மீ தூரம் விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரி
x

தாம்பரத்தில் செல்போனை திருடிவிட்டு தப்பியோடிய வடமாநில இளைஞரை பெண் போலீஸ் காளீஸ்வரி விரட்டி பிடித்தார்.

சென்னை

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீசாக பணியாற்றி வருபவர் காளீஸ்வரி. இவர், தாம்பரம் பஸ் நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பஸ்சில் ஏறிய வடமாநில இளைஞர், சிறிது நேரத்தில் கீழே இறங்கினார்.

இதனால் அவர் மீது சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் காளீஸ்வரி, அந்த இளைஞரிடம் விசாரிக்க முயன்றார். ஆனால் அந்த இளைஞர், தப்பி ஓடினார். உடனே காளீஸ்வரி அந்த இளைஞனை விரட்டிச்சென்றார். சுமார் 1 கிலோமீட்டர் தூரம் விரட்டி சென்ற போலீஸ் காளீஸ்வரி அந்த இளைஞரை மடக்கிப்பிடித்து சோதனை செய்தார். அதில் அந்த இளைஞரின் சட்டை பையில் ரூ.76 ஆயிரம் மதிப்புள்ள விலை உயர்ந்த ஐபோன் செல்போன் இருந்தது.

அவரை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று நடத்திய விசாரணையில் அவர், ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சோட்டோ (வயது 19) என்பதும், கூடுவாஞ்சேரி அரசு பஸ்சில் இருந்த பயணி ஒருவரின் விலை உயர்ந்த செல்போனை திருடியதும் தெரிந்தது.

இதற்கிடையில் செல்போனை பறிகொடுத்தவர் அதே எண்ணில் தொடர்பு கொண்டபோது, அவரிடம் போலீசார் விவரங்களை தெரிவித்து போலீஸ் நிலையம் வரவழைத்தனர். விசாரணையில் அவர் ஆண்டிமடத்தை சேர்ந்த மாயவேல் (30) என தெரியவந்தது. அவர் அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்போனை திருடிய வடமாநில இளைஞன் சோட்டோவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

துரிதமாக செயல்பட்டு செல்போன் திருடனை விரட்டிப்பிடித்த பெண் போலீஸ் காளீஸ்வரிக்கு பொதுமக்கள் பலரிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தாம்பரம் இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையில் போலீசாரும் காளீஸ்வரியை சால்வை அணித்து பாராட்டினர்.


Next Story