மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த பெண் சாவு
பாலக்கோடு அருகே மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
பாலக்கோடு
பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த முருகன் மனைவி பார்வதி (வயது 32). இவர் பாலக்கோடு தீர்த்தகிரி நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி பார்வதி வேலை முடிந்து அதே பகுதியில் உள்ள தோழி கவிதா என்பவரின் வீட்டுக்கு பணம் கொடுக்க சென்றார். அப்போது மாடியில் ஏறியபோது கையில் வைத்திருந்த சாவி தவறி தகர சீட் மீது விழுந்தது. அப்போது கம்பி மூலம் சாவியை எடுக்க முயன்றபோது, கம்பி மேலே இருந்த மின் கம்பத்தின் வயரில் பட்டதும் பார்வதியை மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.