கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு


கோவை நீதிமன்றத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
x

சிட் வீசிய கணவர் சிவக்குமார் மீதான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை

கோவை ராமநாதபுரம் காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). லாரி டிரைவர். இவருடைய மனைவி கவிதா (35). இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்து குடும்பமாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு பஸ்சில் சென்றபோது கவிதா ஒரு பயணியிடம் நகை திருடி உள்ளார். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கவிதாவை கைது செய்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த கவிதாவுக்கு பலருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை கணவர் சிவக்குமார் கண்டித்தார். ஆனால் அவர் அதை கேட்கவில்லை என்று தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு கவிதாவுக்கு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை அறிந்த சிவக்குமார் அவரை கண்டித்து உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக கவிதா தனது கணவர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டு சென்றார். பின்னர் அவர் தனது கள்ளக்காதலனுடன் சூலூர் அருகே கண்ணம்பாளையம் பிரிவில் வசித்து வந்தார்.

அதை அறிந்த சிவக்குமார், பலமுறை அங்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு கவிதாவை அழைத்தார். ஆனால் அவர் கணவருடன் செல்ல மறுத்து விட்டார். இதனால் கவிதா மீது சிவக்குமாருக்கு கோபம் ஏற்பட்டது.

இதற்கிடையே, கவிதா மீது உள்ள திருட்டு தொடர்பான வழக்கு கோவையில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அதில் ஆஜராகுவதற்காக கவிதா மார்ச் 23 ந்தேதி கோவை கோர்ட்டு வளாகத்துக்கு வந்தார்.

இதை அறிந்த சிவக்குமாரும் அங்கு வந்தார். அவரை பார்த்ததும் கவிதா கோர்ட்டு வளாகத்தில் முதலாவது மாடியில் உள்ள முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு சென்றார். உடனே சிவக்குமாரும் அவரை பின் தொடர்ந்து சென்று, உன்னை பார்க்காமல் குழந்தைகள் சோகமாக உள்ளனர், என்னுடன் வந்து விடு, நாம் சந்தோஷமாக வாழலாம் என்று கூறி குடும்பம் நடத்த அழைத்து உள்ளார்.

ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் கவிதா அமைதியாக நின்று கொண்டு இருந்தார். தொடர்ந்து பேசிய சிவக்குமார், எனக்காக நீ வராவிட்டாலும், குழந்தைகளுக்காகவாவது வர வேண்டும் என்று மீண்டும் அழைத்து உள்ளார்.

அதற்கும் எவ்வித பதிலும் சொல்லாமல் நின்ற கவிதா, எனக்கு கோர்ட்டுக்கு நேரம் ஆகிவிட்டது, இப்போது என்னை அழைத்து விடுவார்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சிறிது தூரம் நடந்து சென்றார்.

உடனே சிவக்குமாரும் பின் தொடர்ந்து சென்றார். அப்போது கவிதா, முதலாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு வாசல் அருகே சென்று நின்றார். இதனால் சிவக்குமார் அங்கிருந்து சென்றார். இதற்கிடையே வழக்கு விசாரணை வந்ததும் கவிதா உள்ளே சென்றார்.

சாட்சி விசாரணை முடிந்த பிறகு அழைப்பதாக கூறியதால், கோர்ட்டுக்கு வெளியே குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் காத்திருக்கும் பகுதியில் கவிதா அமர்ந்து இருந்தார்.

அப்போது நான் எவ்வளவு நேரம் அழைத்த பிறகும் நீ வீட்டுக்கு வர மாட்டியா என்றுக்கூறி, தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலை திறந்து அதில் இருந்த ஆசிட்டை கவிதா மீது வீசினார். அவரின் உடல் முழுவதும் ஆசிட் பட்டு வெந்தது. மேலும் அவர் அணிந்து இருந்த சேலையும் எரிந்தது.

ஆசிட் வீசப்பட்டதால் கவிதா வலியால் அலறி துடித்தார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வக்கீல்கள் ஓடி வந்து காயத்துடன் உயிருக்கு போராடிய கவிதாவை மீட்டு, அவரை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஆசிட் வீசப்பட்டதில் 85 சதவீதம் அளவுக்கு கவிதாவின் உடல்வெந்து இருப்பதாக கூறினர்.

இதற்கிடையே கவிதா மீது ஆசிட் வீசிய சிவக்குமார், அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே அங்கு நின்ற வக்கீல்கள் ஒன்று சேர்ந்து சிவக்குமாரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கி ரேஸ்கோர்ஸ் போலீசில் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் ஆசிட் வீச்சில் 85 சதவீதம் காயம் அடைந்து இருந்த கவிதா இன்று காலை மரண்மடைந்தார்.

ஆசிட் வீசிய கணவர் சிவக்குமார் மீதான வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story