கல்குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி


கல்குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலி
x

குஜிலியம்பாறை அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி பெண் பலியானார்.

திண்டுக்கல்

கல்குவாரி குட்டை

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கே.ஆனைப்பட்டியை சேர்ந்தவர் சக்கண்ணன். லாரி டிரைவர். இவரது மனைவி சுதாராணி (வயது 50). இவர் குஜிலியம்பாறை அருகே முத்துகருப்பாறையில் உள்ள தனியார் கல்குவாரி குட்டையில் துணிகளை துவைக்க சென்றார்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் சுதாராணி வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சக்கண்ணன், கல்குவாரி குட்டைக்கு சென்று மனைவியை தேடினார். அப்போது கல்குவாரி குட்டை ஓரத்தில் அவருடைய துணிகள் இருந்தது. ஆனால் சுதாராணியை காணவில்லை. அவர் கல்குவாரி குட்டையில் மூழ்கி இருக்கலாம் என்று சக்கண்ணன் சந்தேகமடைந்தார்.

நீரில் மூழ்கி பலி

உடனே அவர் தீயணைப்பு நிலையம் மற்றும் குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்து தேடினர்.

சுமார் 2 மணி நேரத்துக்கு பிறகு சுதாராணியின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குஜிலியம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துணி துவைக்க சென்றபோது குட்டையில் மூழ்கி பெண் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Next Story