வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை; மீனவர் கைது


வாடகை வீட்டுக்காரர்களிடையே திடீர் மோதலில் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை; மீனவர் கைது
x

திருவொற்றியூரில் வாடகை வீட்டுக்காரர்களிடையே ஏற்பட்ட திடீர் மோதல் மாடியில் இருந்து தள்ளி விட்டு பெண் கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட மீனவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

அடிக்கடி தகராறு

திருவொற்றியூர், தியாகராஜபுரம், 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் புஷ்பகாந்தன். கூலித்தொழிலாளி. இவரது மனைவி வசந்தி (வயது 40). இவர்கள் குடும்பத்துடன் வாடகை வீட்டின் 2-வது மாடியில் வசித்து வந்தனர். இந்த நிலையில் இவர்கள் வசித்து வரும் வீட்டின் வாசல் முன்பு அட்டை பெட்டியில் செருப்புகளை அடுக்கி வைப்பது வழக்கம். இது தொடர்பாக வசந்திக்கும் எதிர்வீட்டில் வசித்து வரும் குமார்(52) என்ற மீனவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த 2-ந் தேதி வீட்டு வாசலில் வழக்கம் போல் அட்டை பெட்டியில் செருப்புகளை வசந்தி போட்டு வைத்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த குமார் திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

தவறி விழுந்தார்

இதனால் புஷ்பகாந்தன், அவரது மனைவி வசந்தி ஆகியோருக்கும் குமாருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது குடிபோதையில் இருந்த குமார் ஆத்திரத்தில் திடீரென புஷ்பகாந்தன் மற்றும் அவரது மனைவி வசந்தி மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளார். இந்த தாக்குதலில் நிலைத்தடுமாறிய வசந்தி வீட்டின் 2-வது மாடியில் இருந்து தவறி கீழே வந்து விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பெண் கொலை

இந்த மோதலில் அவரது கணவர் புஷ்பகாந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த வசந்தி சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மீரா விசாரணையில் இறங்கினார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வழக்கை கொலை வழக்காக மாற்றி குமாரை கைது செய்து விசாரணை நடந்து வருகிறது.

வாடகை வீட்டுக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வீட்டின் 2-வது மாடியில் இருந்து பெண் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story