கோத்தகிரி அருகே மின்னல் தாக்கி பெண் பலி


கோத்தகிரி அருகே மின்னல் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 27 May 2023 5:45 AM IST (Updated: 27 May 2023 5:45 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் இலைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் இலைப் பறிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த பெண் தொழிலாளி மீது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

மின்னல் தாக்கியது

கோத்தகிரி அருகே உள்ள ஓம் நகர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி இன்பமலர் (வயது 44). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். கூலித் தொழிலாளியான இன்பமலர் நேற்று மாலை கோடநாடு அருகே கெரடாமட்டம் கிராமப் பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அப்பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.

திடீரென இன்பமலர் மீது மின்னல் தாக்கியுள்ளது. இதில் அவர் சுருண்டு விழுந்தார்.

இதைக் கண்டு சக தொழிலாளர்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கெரடாமட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

சோகம்

அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மின்னல் தாக்கியதில் பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story