மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து பெண் பலி; 4 பேர் படுகாயம்
மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
மானாமதுரை,
மானாமதுரை அருகே கார் கவிழ்ந்து பெண் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
கார் கவிழ்ந்தது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெரியசாமி, செல்வி, பிரகாஷ், குப்புசாமி, கருப்பாத்தாள் ஆகியோர் குடும்பத்துடன் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்திற்கு காரில் வந்தனர்.
பிரகாசுக்கு திருமணம் என்பதால் அவருடைய திருமண பத்திரிகையை வைத்து ராமேசுவரத்தில் தரிசனம் செய்து விட்டு மீண்டும் காரில் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மாசாணி அம்மன் கோவில் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த தடுப்பின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
பெண் பலி
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கருப்பாத்தாள்(வயது 58) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரை ஓட்டி வந்த புது மாப்பிள்ளை பிரகாஷ் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக வந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
காயம் அடைந்த 4 பேரும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.