பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு


பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு
x
தினத்தந்தி 10 May 2023 12:15 AM IST (Updated: 10 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்த மர்ம நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில், மே.10-

நாகர்கோவிலில் பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்த மர்ம நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

நகை பறிப்பு

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் தொல்லவிளையை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி வசந்தா (வயது 58). இவர் நேற்று அதிகாலை 6 மணியளவில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் வசந்தாவின் அருகே வந்ததும் மோட்டார் சைக்கிளில் இருந்தபடி அவரிடம் ஏதோ பேச்சு கொடுத்தனர்.

வசந்தா அவர்களுக்கு பதில் அளிக்க முயன்ற போது அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த மர்ம நபர் பறித்தார். இதை சற்றும் எதிர்பாராத வசந்தா கூச்சலிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அதற்குள் வசந்தாவின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து நகையை பறித்த நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி தப்பி ஓடினார்.

ஒருவர் சிக்கினார்

ஆனால் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவாிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை அவர் கூறினார்.

நகை பறிப்புக்கும், தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், நகை பறித்து சென்ற மர்ம நபர் தன்னிடம் லிப்ட் கேட்டு வந்ததாகவும் தெரிவித்தார். எனினும் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் தப்பிச் சென்ற மர்ம நபரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். நகை பறித்த மர்ம நபர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளனவா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

நாகர்கோவிலில் அதிகாலையில் வீட்டு முன் நின்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் நகை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story