கூடுதல் வரதட்சணை கேட்டு வெளியேற்றினர்..! கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்


கூடுதல் வரதட்சணை கேட்டு வெளியேற்றினர்..! கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டில் குடியேறிய பெண்
x

மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் அந்த பகுதி பொதுமக்களுடன் சென்று பிரவீனா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மயிலாடுதுறை

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பில்லூர் கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகள் பிரவீணா(வயது 28). இவருக்கும், மயிலாடுதுறை மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் நடராஜனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது.

சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் நடராஜன் வேலை பார்ப்பதால் கணவர் வீட்டில் பிரவீனா வசித்து வந்தார். கணவர் வெளியூரில் இருப்பதால் கணவரின் தம்பி தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரவீனா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜிடம் அந்த பகுதி பொதுமக்களுடன் சென்று பிரவீனா ஒரு புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எனக்கும், மன்னம்பந்தல் தெற்கு வெளியை சேர்ந்த நடராஜனுக்கும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின்போது எனது பெற்றோர் 24 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை வழங்கினர்.

இந்த நிலையில் என்னை கூடுதல் வரதட்சணை வாங்கி வருமாறு எனது கணவர் குடும்பத்தினர் கொடுமைப்படுத்துகின்றனர். கூடுதல் வரதட்சணை கொடுக்காவிட்டால் உனது கணவர் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டார் என்று கூறுகின்றனர்.

மேலும் என்னை கணவர் வீட்டில் சேர்க்காமல் வீட்டை பூட்டி விட்டு அனைவரும் பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டனர். இதனால் கடந்த 20 நாட்களாக கணவர் வீட்டு வாசலில் தான் நான் தங்கி உள்ளேன். ஊர் பஞ்சாயத்தார் சமாதானம் பேசியும் என்னை வீட்டுக்குள் சேர்க்க மறுக்கின்றனர்.

ஆகவே நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தன்னை கணவர் குடும்பத்தினர் வீட்டில் வசிக்க அனுமதிக்காததால் ஆத்திரம் அடைந்த பிரவீனா நேற்று கடப்பாரையால் கணவர் வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் சென்று குடியேறினார்.

கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை வீட்டுக்குள் அனுமதிக்காத நிலையில் கடப்பாரையால் கதவை உடைத்து கணவர் வீட்டுக்குள் புகுந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story