போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
கடலூரில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு நேற்று காலை இளம்பெண் ஒருவர் தனது குழந்தையுடன் வந்தார். பின்னர் அவர், தான் மறைத்து வைத்து கொண்டு வந்திருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்த, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர், பெண்ணாடத்தை சேர்ந்த செல்வமணி மகள் பவித்ரா(வயது 27) என்பதும், அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில், பவித்ரா தனது கணவருடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், கணவரின் பெற்றோர் தற்போது வேறு ஒரு பெண்ணை அவருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். இதை அறிந்த பவித்ரா, அவரது கணவரின் குடும்பத்தினரை தட்டிக்கேட்ட போது அவர்கள் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரியும், தன்னை தாக்கிய கணவரின் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீக்குளிக்க முயன்றது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி, பவித்ராவை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.