3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி


3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி செய்தார். மற்றொரு பெண்ணும் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு அளிப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொது மக்கள் வந்தனர். அவர்களை கடலூர் புதுநகர் போலீசார் தீவிர சோதனை செய்து அனுப்பினர். இருப்பினும் இந்த சோதனையில் இருந்து தப்பிய ஒரு பெண் தன்னுடைய 3 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்குள் வந்தார்.

பின்னர் திடீரென தான் கையில் வைத்திருந்த டீசலை தன் மீதும், 2 ஆண், ஒரு பெண் குழந்தைகள் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதை பார்த்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், மனு அளிக்க வந்தவர்கள் அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். சிலர் குழந்தைகள் மீது ஏன் டீசலை ஊற்றினாய் என்று அந்த பெண்ணை திட்டினர்.

வீண் பழி

தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார் வந்து, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் பண்ருட்டி வீரசிங்கன்குப்பத்தை சேர்ந்த ராஜ்குமார் மனைவி சத்தியா (வயது 25) என்று தெரிந்தது. தொடர்ந்து அவர் போலீசாரிடம், முன்விரோத தகராறு காரணமாக என் மீது எங்கள் கிராமத்தை சேர்ந்த 3 பேர் வீண்பழி சுமத்தினர். இதை எனது கணவர் ராஜ்குமார் தட்டிக்கேட்டு தகராறு செய்து, ஒருவரின் கார் கண்ணாடியை உடைத்தார். இந்த வழக்கில் எனது கணவரை முத்தாண்டிக்குப்பம் போலீசார் கைது செய்தனர்.

எச்சரிக்கை

பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்ததும், என் மீது சந்தேகப்பட்டு என்னை கொடுமைப்படுத்தி வருகிறார். அவருக்கு உடந்தையாக மற்றொரு வாலிபரும் செயல்பட்டு வருகிறார்.

இது பற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஆன்லைன் மூலமாகவும், முத்தாண்டிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் நேரிலும் புகார் மனு அளித்தேன். இது வரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்வதற்காக டீசலை ஊற்றினேன் என்றார். இதையடுத்து அவரை போலீசார் எச்சரிக்கை செய்து, கலெக்டரிடம் மனு அளிக்க வைத்தனர். அதன்பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

பரபரப்பு

இதேபோல் தூக்கணாம்பாக்கத்தை சேர்ந்த கோவிந்தன் மனைவி அம்சவள்ளி என்பவரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து, பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் அரசு ஆஸ்பத்திரி அருகில் வளையல் விற்கும் என்னை பார்க்க எனது மாமா வந்தார். அவர் வந்த கார் கண்ணாடியை, ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் ஒருவர் உடைத்து, அவரையும் தாக்கி விட்டார். இது பற்றி புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை வளையல் கடை வைக்க விடாமல் பிரச்சினை செய்கிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இருப்பினும் இந்த 2 சம்பவங்களால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story