ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டம்


ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டம்
x

தொழுதாவூர் அரசு நடுநிலை பள்ளி எதிரே குட்டை அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் தொழுதாவூர் அரசு நடுநிலை பள்ளி எதிரே குட்டை அருகே உள்ள இடத்தை அதே கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர், ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாயார் உள்பட 7 பேர் ஆக்கிரமித்து கட்டிடங்களை கட்டி உள்ளதாக அதே கிராமத்தை சேர்ந்த ரேணுகா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்‌.

இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவுபடி வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றினர். ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாயாரின் 2 வீடுகளில் ஒன்றை மட்டும் இடித்த அதிகாரிகள், மற்றொரு வீட்டை நேற்று இடிப்பதாக தெரிவித்தனர்.

ஆனால் அந்த வீட்டை இடிக்காததை கண்டித்து நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வி.ஏ.ஒ. அலுவலகத்தில் அதிகாரிகளை உள்ளே வைத்து பூட்டினர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மீட்டனர்.

வருவாய்த்துறையினர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி தொழுதாவூர் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் படுத்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இதுபற்றி தாசில்தார் வெண்ணிலா கூறும்போது, "ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தாயார் வீட்டுக்கு பட்டா இருப்பதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும். தவறுகள் இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக வீடு இடிக்கப்படும்" என்றார்.

அப்போது அங்கு வந்த திருவள்ளூர் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story