சென்னை: மரம் சாய்ந்து விழுந்து காரில் சென்று கொண்டிருந்த வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு


சென்னை: மரம் சாய்ந்து விழுந்து காரில் சென்று கொண்டிருந்த வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு
x

சென்னையில் மரம் சாய்ந்து விழுந்து காரில் சென்றுகொண்டிருந்த வங்கி பெண் மேலாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை,

சென்னை நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதேபோல், சென்னை கே.கே.நகரிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கே.கே.நகரில் உள்ள லட்சுமண சாலை - பிடி ராஜேந்திரன் சாலை சந்திக்கக்கூடிய இடத்தில் தனியார் வங்கியில் வேலை செய்துவந்த வாணி கபிலன் என்பவரும் அவரது தங்கை எழிலரசி என்பவரும் காரில் சென்றுள்ளனர்.

காரை டிரைவர் கார்த்திக் என்பவர் ஓட்டிவந்துள்ளார். மாலை 6 மணியளவில் இந்த சாலை சந்திப்பு வழியாக தனியார் வங்கி அருகே கார் வந்தபோது அங்கு திடீரென சாலையின் ஓரம் இருந்த மரம் காரின் பின்பக்கம் சாய்ந்து விழுந்தது.

இதில், காரின் பின் இருக்கையில் இருந்த வாணி கபிலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எழிலரசி படுகாயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளார். கார் டிரைவரும் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கேகே நகர் முழுவதும் மழைநீர் வடிகால் அமைப்பு பணிக்காக சாலை ஓடமாக உள்ள பகுதிகளில் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுபோன்று தோண்டும் பணியின் போது தான் சாலையின் அருகே இருந்த மரம் சரிந்து சாலையில் வந்துகொண்டிருந்த கார் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்த வாணியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story