குன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள்
நூறுநாள் வேலை கேட்டு குன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முற்றுகை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் குன்னம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியில் சுமார் 5 ஆயிரம் பொதுமக்கள் உள்ளனர். இந்த குன்னம் ஊராட்சியில் தற்போது அனைத்து வார்டு மக்களுக்கும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 9 வார்டுகளில் கடந்த வாரம் குறிப்பிட்ட 4 வார்டு பொதுமக்களுக்கு மட்டும் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்பட்டுள்ளது. இதை அறிந்த மற்ற 5 வார்டு பொதுமக்கள் தங்களுக்கு பணிகள் வழங்கப்படாமல் புறக்கணிப்பதாக கூறி 5 வார்டு பெண்கள் ஒன்று திரண்டு குன்னம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பேச்சுவார்த்தை
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) செல்வகுமார், குன்னம் போலீசார் குன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு விரைந்து வந்து முற்றுகையிட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் நிதி குறைவாக இருந்ததால் குறிப்பிட்ட சில வார்டுகளுக்கு மட்டும் பணிகள் வழங்கியதாகவும், வருகிற திங்கட்கிழமை முதல் அனைத்து வார்டு மக்களுக்கும் பணிகள் தொடர்ந்து வழங்கப்படும் எனவும் வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகுமார் தெரிவித்தார். அதனை தொடர்ந்து குன்னம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.