குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் முற்றுகை
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளமோர்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் பள்ளமோர்குளம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்ணா
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியனுக்கு உட்பட்டது தில்லையேந்தல் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட பள்ளமோர்குளம் கிராமத்தை சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு காலி குடங்களுடன் வந்தனர். இவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து காலி குடங்களுடன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் கூறியதாவது:-
எங்கள் பள்ளமோர் குளம் கிராமத்தில் 160 குடியிருப்புகளில் 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் குடிநீர் ஆதாரம் இல்லாததால் காவிரி குடிநீர் மட்டுமே எங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தது.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் எங்களுக்கு குடிநீர் சரிவர சப்ளை செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் வேறு வழியின்றி ஒரு குடம் ரூ.14 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். குழாயை சரிசெய்து குடிநீர் சப்ளை செய்யுமாறு பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக எங்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் அனைவரும் கலெக்டர் அலுவலகத்தில் வந்து குடியேறும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஏராளமானோர் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும், ஒரு வாரத்திற்குள் சீராக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்றும் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து 3 மணிநேரம் நடைபெற்ற போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.