தோட்டத்து கிணற்றில் பிணமாக மிதந்த இளம்பெண்
நத்தக்காடையூர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்று ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்
நத்தக்காடையூர் அருகே தோட்டத்து கிணற்றில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்று ேபாலீசார் விசாரித்து வருகிறார்கள்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கிணற்றில் பெண் பிணம்
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழைய கோட்டை ஊராட்சி முள்வாடிப்பாளையம் கிராமத்தில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான கிணறு உள்ளது. 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 30 அடி தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றில் நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் ஒன்று மிதப்பதாக காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் மற்றும் காங்கயம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மிதந்த பெண் பிணத்தை மீட்டு மேலே கொண்டு கொண்டு வந்தனர். பின்னர் அந்த பெண் பிணத்தை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
கிணற்றில் பிணமாக மிதந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் ஈரோடு வளையக்கார வீதியை சேர்ந்த தணிகைவேல் என்பவரின் மனைவி ஹரிணி (வயது 36) என தெரியவந்தது. இவர்களுக்கு ருத்ரவேல் (11), தனசுதர்சன் (7) என்று இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹரிணி கடந்த 4 வருடங்களாக தனது கணவரை பிரிந்து ஈரோடு மாரிமுத்து வீதியில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருடைய குழந்தைகள் இருவரும் தணிகைவேலுடன் வசித்து வருகிறார்கள்.
மேலும் தம்பதி இருவருக்கும் ஈரோடு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹரிணி கிணற்றில் பிணமாக மிதந்துள்ளார். ஹரிணி இங்கு எப்போது வந்தார்? எப்படி வந்தார்? கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பது உட்பட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.