வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு நன்றி தெரிவித்த பெண்கள்
உரிமைத்தொகை கிடைத்ததால் கோவை செல்வபுரம், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன் கோலமிட்டு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
முன்னாள் முதல்- அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி மாநிலம் முழுவதும் 1 கோடியே 6 லட்சம் பெண்களின் வங்கி கணக்குகளில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 நேற்று முன்தினம் முதல் வரவு வைக்கப்பட்டது. தங்களுக்கு உரிமைத்தொகை கிடைத்ததால் கோவை செல்வபுரம், வெள்ளலூர் பகுதியை சேர்ந்த பெண்கள் தங்களது வீடுகளுக்கு முன் கோலமிட்டு தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
ரூ.1000 உரிமைத்தொகை வழங்கிய அரசிற்கும், முதல்- அமைச்சருக்கும் நன்றி, திராவிட மாடல் அரசிற்கு பாராட்டு உள்ளிட்ட வாசகங்கள் எழுதி கோலமிட்டனர்.
இது குறித்து கோலமிட்ட பெண்கள் கூறுகையில்,வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் இலவச பஸ் பயண திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
தற்போது மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கி உள்ளார். மாதந்தோறும் வழங்கப்படும் இந்த உரிமை தொகையால் வீட்டு செலவுகளுக்கு பெண்கள், பிறரை எதிர் பார்க்க வேண்டிய நிலை ஏற்படாது.
மேலும் உரிமைத்தொகை யை சிறிய, சிறிய செலவுகள் மற்றும் மளிகை, மருந்து, மாத்திரை போன்ற அத்தியாவசிய தேவைக்கும் சுயமாக பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றனர்.