சென்னிமலை முருகன் கோவிலுக்கு '20 ரூபாய் போலி நோட்டை கொடுத்து நுழைவு சீட்டு வாங்கிச்சென்ற பெண்கள்'


சென்னிமலை முருகன் கோவிலுக்கு 20 ரூபாய் போலி நோட்டை கொடுத்து நுழைவு சீட்டு வாங்கிச்சென்ற பெண்கள்
x

சென்னிமலை முருகன் கோவிலுக்கு 20 ரூபாய் போலி நோட்டை கொடுத்து பெண்கள் நுழைவு சீட்டை வாங்கி சென்றது தெரியவந்துள்ளது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலுக்கு 20 ரூபாய் போலி நோட்டை கொடுத்து பெண்கள் நுழைவு சீட்டை வாங்கி சென்றது தெரியவந்துள்ளது.

சென்னிமலை முருகன்

ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சென்னிமலை முருகன் கோவிலுக்கு ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள்.

படிக்கட்டுகள் வழியாக குறைந்த அளவில் பக்தர்கள் நடந்து சென்றாலும் கார், வேன் மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் மலைப்பாதை வழியாக முருகன் கோவிலுக்கு செல்வார்கள். இதற்காக அடிவாரத்தில் உள்ள நுழைவு வாயிலில் இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.10, கார்களுக்கு ரூ.20, வேன்களுக்கு ரூ.50 நுழைவு கட்டணமாக கோவில் நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது.

போலி நோட்டு

நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் வழக்கம்போல் அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் சென்னிமலை முருகன் கோவிலுக்கு வந்திருந்தனர். இந்தநிலையில் ஸ்கூட்டரில் வந்த சுமார் 40 வயதுடைய 2 பெண்கள் அங்கிருந்த கோவில் பணியாளர்களிடம் 20 ரூபாய் நோட்டை கொடுத்து நுழைவு கட்டணம் வாங்கினார்கள். பின்னர் மீதி 10 ரூபாயை வாங்கி கொண்டு மலைப்பாதை வழியாக கோவிலுக்கு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பிறகு கோவில் பணியாளர் பெண்கள் கொடுத்த 20 ரூபாய் நோட்டை பார்த்தபோது அது அச்சு அசலாக இருந்த குழந்தைகள் விளையாடும் போலி 20 ரூபாய் நோட்டு என்பது தெரிந்தது. இதனால் அங்கிருந்த கோவில் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

கடைகளில் விற்கிறார்கள்...

இதுகுறித்து கோவில் பணியாளர் ஒருவர் கூறுகையில், 'செவ்வாய்க்கிழமைகளில் அதிகாலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் கோவிலுக்கு வருவார்கள். நுழைவு வாயிலில் நீண்ட வரிசையில் நின்று வாகன நுழைவுச்சீட்டு பெற்று செல்வார்கள். இதில் பெரும்பாலானோர் கிழிந்த நோட்டுகளையே கொடுப்பதுண்டு. ஆனால் நாங்கள் அவர்களிடம் அதை திருப்பி கொடுத்து கொண்டு இருந்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும் என்பதால் வாங்கி கொள்வோம். ஆனால் தற்போது 2 பெண்கள் 20 ரூபாய் போலி நோட்டை கொடுத்து சென்றுள்ளனர். ஒருவேளை அந்த பெண்களே எங்காவது தெரியாமல் அதை வாங்கி ஏமாந்து இருக்கலாம். கடைகளில் குழந்தைகள் விளையாடுவதற்காக இதுபோன்ற போலி நோட்டுகளை விற்கின்றனர். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுக்கவேண்டும்' என்றார்.


Next Story