மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்செல்போன்கள் மூலம் நூதன மோசடி:பொதுமக்கள் கருத்து


மயக்கும் குரலில் அழைக்கும் பெண்கள்செல்போன்கள் மூலம் நூதன மோசடி:பொதுமக்கள் கருத்து
x
தினத்தந்தி 14 March 2023 6:45 PM GMT (Updated: 14 March 2023 6:46 PM GMT)

மயக்கும் குரலில் பேசி செல்போன் மூலம் நூதன மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

தேனி

ஹலோ... உங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வேண்டுமா? வீடு-மனை வேண்டுமா? நகைக்கடன் தேவையா?... என்பது போன்ற தகவல்கள் செல்போன் எண்களுக்கு குறுஞ்செய்தியாகவும், அழைப்புகளாகவும் அன்றாடம் வருகின்றன.

ஆன்லைன் மோசடி

ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து பேசுகிறோம், 'உங்களால் முடிந்த பண உதவிகளை இந்த வங்கி கணக்கில் செலுத்துங்கள்' என்பது போன்ற அழைப்புகளும் அடிக்கடி வருகின்றன.

அதுமட்டும் அல்ல வங்கியில் இருந்து பேசுகிறோம். உங்கள் ஏ.டி.எம். கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கூறி வங்கி கணக்கு விவரங்களை பெற்று, செல்போன் எண்ணுக்கு வரும் ஓ.டி.பி. எண்ணை வாங்கி அப்பாவி மக்களிடம் நூதன முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர் கதையாகி வருகின்றன.

அதேபோன்று 'உங்கள் செல்போன் எண்ணுக்கு மெகா பரிசு விழுந்துள்ளது. இந்த லிங்கை திறந்து பாருங்கள்' என்று குறுந்தகவல் அனுப்பி அதன் மூலம் ஒரு நொடியில் வங்கி கணக்கில் இருந்து பணம் 'அபேஸ்' செய்யப்படுகிறது.

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பர்னிச்சர் கடை உரிமையாளர் கார்த்திகேயன் 'ஆன்லைன்' பண மோசடி கும்பல் அனுப்பிய லிங்கை தொட்டு ரூ.65 ஆயிரத்தை பறிகொடுத்தார். அவரிடம் 'ஆன்லைன்' மூலம் சோபா, மேஜை, கட்டில் வாங்குவதாக கூறி இந்த நூதன மோசடி அரங்கேறியது.

விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப 'சைபர்' குற்றங்களும் புதுப்புது வடிவங்கள் எடுத்து வருகின்றன. 'சைபர்' குற்றங்களை தடுப்பது போலீசாருக்கு சவாலாக இருக்கிறது. இதுபோன்ற அழைப்புகள், மோசடி குறுந்தகவல்கள் முதலில் மனதை மயக்குவதாக இருந்தாலும் இறுதியில் மக்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகின்றன.

இதுகுறித்து பொதுமக்களின் ஆதங்கம் வருமாறு:-

எப்படி எண்கள் கிடைக்கின்றன?

தேனியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் விக்னேஷ்வர பாண்டியன்:- செல்போனில் பதிவு செய்துள்ள உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை விடவும், தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் அதிக அளவில் வருகின்றன. வங்கிக்கடன், பரிசுக் கூப்பன் போன்றவை தொடர்பான குறுஞ்செய்திகளும் அதிக அளவில் வருகின்றன. ஒருமுறை அழைப்பை துண்டித்தாலும் மீண்டும், மீண்டும் அழைத்து தொந்தரவு செய்கிறார்கள். செல்போன் எண்களை பயன்படுத்தியும் மோசடி நடக்கிறது. எனக்கு தெரிந்த பெண் ஒருவரின் வாட்ஸ்-அப் எண்ணை வேறு ஒரு நபர் பயன்படுத்தி, உறவினர்கள், நண்பரிடம் அந்த பெண் அனுப்புவது போல் அனுப்பி பணம் பறிக்க முயன்றார்.

சரியான நேரத்தில் தெரிய வந்ததால், அந்த வாட்ஸ்-அப் செட்டிங்கில் சென்று பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்திக் கொண்ட பிறகு அந்த மோசடி தடுக்கப்பட்டது. எப்படித்தான் இவர்களுக்கு நம்முடைய செல்போன் எண் கிடைக்கும் என்று தெரியவில்லை. மக்கள் நிம்மதியை சீர்குலைக்கும் இதுபோன்ற தேவையற்ற அழைப்புகள் வருவதை தகவல் தொடர்புத்துறை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.

போலி முகநூல் கணக்கு

கூடலூரை சேர்ந்த ஆசிரியர் அழகேசன்:- ஓராண்டுக்கு முன்பு எனது வீட்டில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. அதில் பணம், நகை, பொருட்கள் என லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது. அப்படிப்பட்ட சூழலில் எனது பெயரில் யாரோ போலியான முகநூல் கணக்கு தொடங்கி விட்டனர். அதில் இருந்து எனது நண்பர்கள், உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பினர். எனது பெயரை பயன்படுத்தி, மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும், அவசரமாக உதவி தேவை என்றும் கூறி பணம் கேட்டனர்.

நண்பர்கள், உறவினர்கள் சிலர் என்னுடைய செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்தனர். அப்போது தான் எனக்கு போலி கணக்கு தொடங்கிய விவரம் தெரிந்தது. பின்னர் அந்த போலி கணக்கு குறித்து எனது நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிவித்து யாரும் பணம் அனுப்பி விட வேண்டாம் என்று அறிவுறுத்தினேன். முகநூலில் சில பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன. அதை பயன்படுத்திக் கொள்வதும், விழிப்புணர்வோடு இருப்பதும் மோசடியில் சிக்காமல் தப்பிக்க வழிவகுக்கும்.

வெளிநாட்டு பரிசுப்பொருட்கள்

தேனியை சேர்ந்த வக்கீல் செல்வக்குமார்:- ஆன்லைன் மோசடி குறித்து நான் ஒரு வழக்கு நடத்தி வருகிறேன். எனக்கும் சில அனுபவங்கள் உள்ளன. எனது பெயரில் போலியான முகநூல் கணக்கு தொடங்கி, நண்பர்களிடம் பணம் பறிக்க முயற்சி நடந்தது. நண்பர்கள் எனக்கு தகவல் தெரிவித்த உடனேயே அந்த முகநூல் கணக்கை முடக்க நடவடிக்கை எடுத்தேன். மேலும், பணம் கேட்ட நபரை தொடர்பு கொண்ட போது அவர் இந்தியில் பேசினார். மேலும் வெளிநாட்டில் வக்கீலாக இருப்பதாக கூறி ஒரு பெண் முகநூலில் நட்பு அழைப்பு அனுப்பினார்.

வக்கீல் தானே என அவருடைய அழைப்பை ஏற்றேன். எனக்கு பரிசு அனுப்ப விரும்புவதாக கூறினார். வேண்டாம் என்ற போதிலும், தனது நட்புக்காக அனுப்புவதாக கூறி முகவரி கேட்டார். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என முகவரி அனுப்பினேன். ஆடம்பரமான பல பொருட்களை வாங்கி இருப்பதாக ஒவ்வொரு புகைப்படமாக அனுப்பினார். பின்னர் ரூ.25 லட்சம் மதிப்பில் பரிசுப் பொருட்களை அனுப்பியதாக கூறி, பார்சல் செய்து கூரியர் அனுப்பிய புகைப்படமும் அனுப்பினார். சில நாட்களில் மும்பை விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், கூரியர் செலவு ரூ.20 ஆயிரம் அனுப்ப வேண்டும் என்றும் கூறினர். ரூ.25 லட்சத்துக்கு பரிசு அனுப்பியவர் கூரியருக்கு ரூ.20 ஆயிரம் கொடுத்து இருக்க முடியாதா? என்ற எண்ணம் தோன்றியது. பணம் எதுவும் அனுப்பாமல் அந்த மோசடியில் சிக்காமல் தப்பித்தேன். ஆனால், எனது நண்பர்கள் சிலர் இதுபோன்று பணம் அனுப்பி ஏமாற்றப்பட்டதாக தெரிவித்தனர். 'சைபர்' குற்றவாளிகள் விரிக்கும் மோசடி வலையில் மக்கள் விழுந்து விடாமல் உஷாராக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Related Tags :
Next Story