எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பெண்கள் அணுகலாம்; நீதிபதி பல்கீஸ் பேச்சு


எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பெண்கள் அணுகலாம்; நீதிபதி பல்கீஸ் பேச்சு
x

எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் சட்டப்பணிகள் ஆணைக்குழுவை பெண்கள் அணுகலாம் என்று நீதிபதி பல்கீஸ் கூறினார்.

பெரம்பலூர்

இலவச சட்ட உதவி

தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவுடன் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு இணைந்து பெண்களுக்கான சிறப்பு சட்ட விழிப்புணர்வு முகாமை நேற்று நடத்தியது. ஆலம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட செஞ்சேரி கிராமத்தில் நடந்த இந்த முகாமிற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான பல்கீஸ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்றால், அவர்கள் முதலில் படிக்க வேண்டும். தாங்கள் படிக்கவில்லை என்றாலும் தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும். பெண்களுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் பெரம்பலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை அணுகலாம். அங்கு மனு கொடுத்தால் சட்ட உதவி இலவசமாக அளிக்கப்பட்டு, நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று தரப்படும்.

கட்டாயப்படுத்தி திருமணம்...

பெண்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களது உரிமைகளை நிலை நாட்டுவதற்கும் அரசு சட்ட திருத்தங்களை மேற்கொண்டு, புதிய புதிய சட்டங்களை கொண்டு வருகிறது. 18 வயது முடிந்த பின்னர் பெண்களை திருமணம் செய்து கொடுங்கள். ஆனால் பெண்களுக்கு விருப்பம் இல்லாத இடத்தில் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்கக்கூடாது. இதனை தடுத்து நிறுத்த சட்டத்தில் வழிவகை இருக்கிறது. சரக்கு வாகனங்களில் யாரும் பயணம் செய்யக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் பெண்களுக்கு சட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, இலவசமாக சட்ட ஆலோசனைகளை பெற 1800 425 2441 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம், என்றார். முன்னதாக சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளருமான அண்ணாமலை வரவேற்றார். பெரம்பலூர் சமரச மைய வக்கீல் பெரியசாமி, வக்கீல் அண்ணாதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். பெண்களுக்கான சட்டம், உரிமைகள், கடமைகள் குறித்து வக்கீல்கள் அருண்பிரசாத், திவ்யபாரதி ஆகியோர் கருத்துரை வழங்கினர். முடிவில் ஆலம்பாடி ஊராட்சி தலைவர் கல்பனா சீனிவாசன் நன்றி கூறினார்.


Next Story