திருமணமான 2 ஆண்டுகளில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை
தூசி அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
தூசி, மே.3-
தூசி அருகே திருமணமான 2 ஆண்டுகளில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து சப்-கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
திருமணம்
செய்யாறு தாலுகா கூழமந்தல் கிராமம் பெண்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார் (வயது 30). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீதா (25). இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஒரு வயதில் மகன் உள்ளான். கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் திடீரென தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இது குறித்து அறிந்த கீதாவின் தந்தை வெங்கடேசன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு விரைந்து சென்று கீதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தார்.
சப்-கலெக்டர் விசாரணை
திருமணமாகி 2 ஆண்டுகளுக்குள் கீதா இறந்துள்ளதால் வரதட்சணைக் கொடுமையால் இறந்தாரா அல்லது சாவில் வேறு ஏதும் மர்மம் உள்ளதா என்பது குறித்து செய்யாறு சப்- கலெக்டர் அனாமிகா விசாரணை செய்து வருகிறார்.