மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள்ஏ.டி.எம். கார்டு விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்:மோசடி வலையில் சிக்காமல் இருக்க கலெக்டர் அறிவுரை


மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள்ஏ.டி.எம். கார்டு விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்:மோசடி வலையில் சிக்காமல் இருக்க கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 17 Sep 2023 6:45 PM GMT (Updated: 17 Sep 2023 6:46 PM GMT)

மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகள் தங்களின் ஏ.டி.எம். கார்டு மற்றும் ஓ.டி.பி. கடவுச்சொல் விவரங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று கலெக்டர் தெரிவித்தார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மகளிருக்கு உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பெறுவதற்காக நடந்த முதற்கட்ட, இரண்டாம்கட்ட மற்றும் சிறப்பு விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அனுப்பி வைக்கப்படும்.

தங்களின் விண்ணப்பங்கள் என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொண்டு, தங்களின் கோரிக்கைகளை இ-சேவை மையம் வழியாக 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். மேல்முறையீடு செய்யும் கோரிக்கைகள் குறித்து ஆர்.டி.ஓ. அளவில் விசாரணை செய்யப்பட்டு, தகுதியிருப்பின் உடனடியாக அவர்களின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, 30 நாட்களுக்குள் தீர்வு செய்யப்படும்.

மேலும், பயனாளிகளின் செல்போன் எண்ணுக்கு, வங்கியில் இருந்தோ அல்லது ஏதேனும் வங்கி சார்ந்த நிறுவனத்தில் இருந்தோ அழைக்கிறோம் என்று போலியான அழைப்பு வந்து ஏதேனும் ஒருமுறை முறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓ.டி.பி.) அல்லது ஏ.டி.எம். கார்டின் பின்பக்கத்தில் உள்ள மூன்று இலக்க எண்களையோ தெரிவிக்கக்கோரி யாரேனும் கேட்டால் அவர்களுக்கு தெரிவிக்க வேண்டாம்.

இவ்வாறான விவரங்களை தெரிவித்தால் உங்களுடைய வங்கி கணக்கில் இருந்து மேற்கண்ட தொகையை இழக்க நேரிடும் வாய்ப்புள்ளது. எனவே கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளிகள், மோசடி நபர்களின் வலையில் சிக்காமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story