'குழந்தைகளும், கணவரும் வேண்டாம்...' காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பெண்...!
குழந்தைகளும், கணவரும் வேண்டாம் எனக்கூறி காதலனுடன் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த 23 வயதுடைய பெண் ஒருவருக்கு திருமணமாகி கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். அந்த பெண் ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது அவருக்கும், 21 வயதுடைய வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த அந்த பெண்ணின் கணவர் கண்டித்துள்ளார்.
இதனால் நேற்று முன்தினம் அந்த பெண் தனது காதலனுடன் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார்.
போலீசாரிடம் தனக்கு திருமணம் ஆகி கணவர், குழந்தைகள் இருப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் அந்த பெண் தனக்கு கணவரும் வேண்டாம், குழந்தைகளும் வேண்டாம் எனக்கூறி காதலனுடன் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு போலீசாரிடம் தெரிவித்தார்.
அப்போது அவர்களிடம் போலீசார், 'திருமணம் செய்து வைக்க இது மண்டபம் இல்லை' என்று கூறினர். இதையடுத்து அந்த பெண்ணிடம் போலீசார் கணவர், குழந்தைகளை விட்டுவிட்டு வந்தால் வாழ்க்கையே பாழாகி போய்விடும் என்றும், குழந்தைகளுடன் வாழும் பேரின்பத்தை விட்டுவிடாதே எனவும் அறிவுரை கூறினர்.
இதையடுத்து அந்த பெண் தனது பெற்றோருடன் செல்ல விரும்புவதாக தெரிவித்தார். பின்னர் காதலனுடன் அந்த பெண் அங்கிருந்து தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.