பிரபல நகை கடையில் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை அடிக்க முயன்ற பெண்கள்...!
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், தென்பாகம் காவல் நிலையம் எதிரே பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு டிப் டாப்பாக ஆடை அணிந்து வந்த 2 பெண்கள் 10 சவரன் நகையை விலை பேசுவது போல் பேசியுள்ளனர்.
பின்னர் அங்கிருந்த ஊழியர்களிடம், கடை முதலாளி எங்கே இருக்கிறார். அவரை வரச் சொல்லுங்கள் அதிகாரி தோனியில் கூறியுள்ளனர். இதற்கு ஊழியர் என்ன காரணம் எங்களிடம் சொல்லுங்கள் கேட்டதற்கு நாங்கள் விஜிலன்ஸ் அதிகாரிகள் என கூறி ஐ.டி கார்டு ஒன்றைக் காண்பித்துள்ளனர்.
பின்னர் அந்த இரண்டு பெண்களும், நாங்கள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு 10 சவரன் நகை எங்களுக்குத் தரவேண்டும் என கூறியுள்ளனர். இதனால் ஊழியர்களுக்கு இரண்டு பேர் மீதும் சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து ஊழியர்கள் முதலாளியிடம் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறி இருவரையும் தனியாக அமரவைத்து அவர்களுக்கு கூல்டிரிங்ஸ் கொடுத்துள்ளனர். பின்னர் இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
அங்குவந்த போலீசார் இரண்டு பெண்களையும் பிடித்து விசாரணை செய்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் கிராமத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி (36), பெரிய கடை கிராமத்தைச் சேர்ந்த பரமேஸ்வரி (36), என்று தெரியவந்தது.
இருவரும் விஜிலன்ஸ் அதிகாரிகள் என கூறி நகைக்கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று வேறு எங்காவது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து போலீசார் துருவி திருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.