ரூ.6¾ லட்சம் மோசடி செய்த பெண்கள்


ரூ.6¾ லட்சம் மோசடி செய்த பெண்கள்
x

வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.6¾ லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

வேலூர்

வங்கிக்கடன்

காட்பாடி தாலுகா பள்ளிக்குப்பம் அருகே உள்ள கீழ்மோட்டூர், நரிமோட்டூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

குறைந்த வட்டியில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கடந்த 2018-ம் ஆண்டு கல்லப்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 2 பெண்கள் எங்களை சந்தித்து பேசினார்கள். அப்போது 2 பேரும் மகளிர் சுய உதவிக்குழுவில் முக்கிய பொறுப்பில் இருப்பதாக தெரிவித்தனர்.

ரூ.6¾ லட்சம் மோசடி

வங்கியில் கடன் வாங்கி தருவதற்கு அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று ஒருவரிடம் ரூ.7 ஆயிரம் என்று 96 பேரிடம் ரூ.6 லட்சத்து 72 ஆயிரம் பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் தெரிவித்தப்படி வங்கியில் இருந்து கடன் வாங்கி தரவில்லை. எனவே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டோம். ஆனால் அதனை தராமல் காலம் கடத்தி ஏமாற்றி வருகின்றனர்.

இதுகுறித்து பரதராமி, காட்பாடி போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது பணம் கேட்டால் மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தந்தை-மகன் மீது புகார்

அணைக்கட்டு தாலுகா பள்ளிகொண்டாவை அடுத்த பிராமணமங்கலம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அதில், எனக்கு சொந்தமான காரை கடந்த ஆண்டு எங்கள் பகுதியை சேர்ந்த தந்தை-மகன் ஒரு நாளைக்கு ரூ.1,500 வாடகை தருவதாக கூறி எடுத்து சென்றனர். காரை எடுத்து சென்று 13 மாதங்கள் ஆகிறது. ஆனால் இதுவரை அவர்கள் வாடகை பணம் தரவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு உரிய பதில் அளிக்காமல் காலம் கடத்தி வருகின்றனர். மேலும் காரை ஒப்படைக்காமல் ஏமாற்றி வருகின்றனர். தந்தை, மகனிடம் பலமுறை கேட்டும் காரை ஒப்படைக்கவில்லை. அந்த காரை நான் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி எடுத்து உள்ளேன். தற்போது மாத தவணை பணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறேன். இதுகுறித்து பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தும் அவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தந்தை-மகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து எனது கார் மற்றும் 13 மாத வாடகை பணத்தை பெற்றுத்தர வேண்டும் என்று கூறியிருந்தார்.


Next Story