தற்கொலை மிரட்டல் விடுத்து பணியை தடுத்து நிறுத்திய பெண்கள்
பாதாள சாக்கடை கழிவுநீர் தொட்டி அமைக்க எதிர்ப்பு: தற்கொலை மிரட்டல் விடுத்து பணியை தடுத்து நிறுத்திய பெண்கள் திண்டிவனத்தில் பரபரப்பு
திண்டிவனம்
திண்டிவனம் நகராட்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.268 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில் திண்டிவனம் நகராட்சி 24-வது வார்டுக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மோகன், நகராட்சி தலைவர் நிர்மலா மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி செயற்பொறியாளர் நாகேஸ்வரி, உதவி நிர்வாக பொறியாளர் மாரியப்பன் மற்றும் அலுவலர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் கழிவுநீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியை மேற்கொண்டனர். இதை அறிந்து வந்த அந்த பகுதி பெண்கள் சிலர் குழியில் விழுந்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்து பணியை தொடர விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த திண்டிவனம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ், நகராட்சி தலைவர் நிர்மலா, கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ராம்குமார் மற்றும் நகராட்சி அலுவலர்கள் போரட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பணியை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறியதன் பேரில் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் தோண்டப்பட்ட பள்ளமும் பொக்லைன் எந்திரம் மூலம் மூடப்பட்டது.