ரோந்து கப்பல்கள் செல்ல வசதியாக மண்டபம் வடக்கு கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி


ரோந்து கப்பல்கள் செல்ல வசதியாக மண்டபம் வடக்கு கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி
x
தினத்தந்தி 2 Aug 2023 12:15 AM IST (Updated: 2 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரோந்து கப்பல்கள் செல்ல வசதியாக மண்டபம் வடக்கு கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

ரோந்து கப்பல்கள் செல்ல வசதியாக மண்டபம் வடக்கு கடல் பகுதியை ஆழப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ரோந்து கப்பல்கள்

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இந்திய கடலோர காவல் படை நிலையம் செயல்பட்டு வருகிறது. அதுபோல் இந்திய கடலோர காவல் படை நிலையத்தில் 2 அதிவேக ரோந்து கப்பலும் மற்றும் 5 ஹோவர் கிராப்ட் கப்பலும் பாதுகாப்பு பணிக்காக உள்ளன. இதைத்தவிர 2 சிறிய ரோந்து படகுகளும் உள்ளன. மண்டபம் கடலோர காவல் படை நிலையத்தில் உள்ள இந்த ரோந்து கப்பல்கள் பாக் ஜல சந்தி மற்றும் மன்னார்வளைகுடா கடல் பகுதியில் தினமும் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மண்டபம் இந்திய கடலோர காவல் படை நிலையத்திலிருந்து தினமும் பெரிய ரோந்து கப்பல் மற்றும் ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பல்களும் வடக்கு துறைமுக கடல் பகுதி வழியாகவே ரோந்து பணிக்கு செல்லும். இதனிடையே வடக்கு துறைமுக கடல் பகுதியில் இந்த கப்பல்கள் செல்லும் கடல் வழி பாதையில் ஆழம் குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஆழப்படுத்தும் பணி

அதைதொடர்ந்து மத்திய அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து மண்டபம் வடக்கு கடல் பகுதியில் ரோந்து கப்பல் செல்லும் கடல் வழி பாதையை தோண்டி ஆழப்படுத்தும் பணி கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வருகிறது. இந்த பணியில் மிதவை கப்பல் ஒன்று பொக்லைன் எந்திரம் மூலம் கடலை தோண்டி கடலில் உள்ள பாறை மற்றும் மண்ணை அள்ளி மிதவை கப்பலில் போட்டு அதன் பின்னர் அந்த மிதவை கப்பல் கடற்கரை வரை கொண்டுவரப்பட்டு கடற்கரையில் கொட்டும் பணி நடைபெற்று வருகிறது.

கடலைத் தோண்டி ஆழப்படுத்தும் பணி ஆனதே இன்னும் ஓரிரு மாதங்களில் முடிவடையும் என்று கூறப்படுகின்றது. ஏற்கனவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு இதே கடல் வழி பாதையில் தோண்டி ஆழப்படுத்தப்பட்ட பின்னரும் கடல் நீரோட்டம் மாற்றத்தால் இந்த கடல் பகுதியில் மண்ணால் இந்த பாதை மூடப்பட்டதால் மீண்டும் தோண்டி ஆழப்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story