மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.


மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.
x
தினத்தந்தி 2 Oct 2023 6:45 PM GMT (Updated: 2 Oct 2023 6:46 PM GMT)

திருத்துறைப்பூண்டி-திருவாரூர் புறவழிச்சாலையில் இருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி - திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூருக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த வழித்தடத்தில் திருத்துறைப்பூண்டி நகருக்குள் வராமல் திருவாரூர் செல்ல புறவழிச்சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் பேரில் திருத்துறைப்பூண்டி- திருவாரூர் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை பயன்பாட்டிற்கு வந்தது முதல் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம், திருச்செந்தூர், கன்னியாகுமரி, கேரளா மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருத்துறைப்பூண்டி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக சென்று வருகின்றன.

அதேபோல சென்னை, காரைக்கால் ,நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் இருந்து வரும் வாகனங்களும் திருத்துறைப்பூண்டி நகருக்கு வராமல் புறவழிச்சாலை வழியாக செல்ல கிழக்கு கடற்கரை சாலை உள்ளது.

திருவாரூர்- மன்னார்குடி புறவழிச்சாலை

ஆனால் பட்டுக்கோட்டை, வேதாரண்யம், முத்துப்பேட்டை, நாகப்பட்டினத்தில் இருந்து மன்னார்குடிக்கு செல்ல வேண்டும் என்றால் திருத்துறைப்பூண்டி நகருக்குள் வந்தே மன்னார்குடி செல்ல வேண்டி உள்ளது. திருத்துறைப்பூண்டி- திருவாரூர் புறவழிச்சாலையில் இருந்து நேரடியாக மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை இல்லை. இதனால் திருத்துறைப்பூண்டி நகர்பகுதிக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலன் கருதி திருத்துறைப்பூண்டி- திருவாரூர் புறவழிச்சாலை இருந்து மன்னார்குடி சாலையை இணைக்க புறவழிச்சாலை அமைக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சாலைக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி இருந்தாலும் இதற்கான முழு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரைவில் தொடங்க வேண்டும்

இது சம்பந்தமாக முன்னாள் அரசு வக்கீல் கூறுகையில் திருத்துறைப்பூண்டியில் கடும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்படுகிறது. மேலும் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுவதால் வாகனங்கள் அனைத்தும் பல மணி நேரம் காத்திருந்து செல்ல வேண்டி உள்ளது. வாகனங்கள் மட்டுமல்லாது வெளியூரிலிருந்து சுற்றுலா வரும் வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. மேலும் வேலைக்கு செல்வோர் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வோர் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்கு உள்ளாகின்றனர்.

ஆகையால் அரசு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு திருவாரூர் புறவழிச்சாலையில் இருந்து மன்னார்குடி சாலையை இணைக்கும் புறவழிச்சாலை பணியை விரைவில் தொடங்கி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறினார்.


Next Story