அரசு மருத்துவமனையில் காப்பாளரை தாக்கிய தொழிலாளி கைது
அரசு மருத்துவமனையில் காப்பாளரை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம், இடையார் காலனி தெருவை சேர்ந்தவர் ரஜினிகாந்த் (வயது 38). இவர் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் ஒப்பந்த அடிப்படையில் காப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இவர் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த திருக்களப்பூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளியான விக்ரம்(36), தனது மனைவி சிவசக்திக்கு குழந்தை பிறந்துள்ளதாக கூறி, அவர்களை பார்க்க வேண்டும் என்றதாக கூறப்படுகிறது. ஆனால் இரவு நேரம் என்பதால் நோயாளிகள் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், எனவே காலையில் வருமாறு அவரிடம் ரஜினிகாந்த் கூறியதாகவும், இதனால் அவரை விக்ரம் திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதில் காயமடைந்த ரஜினிகாந்த் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிந்து விக்ரமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.