டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
சரவணம்பட்டி
கோவில்பாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள தலைமை போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஒரு போன் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் கோவை மாவட்டம் கோவில்பாளையம் காபி கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை குண்டுவீசி தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்து செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
உடனே கட்டுப்பாட்டு அறை போலீசார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து கோவை மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறை போலீசாருக்கு தெரிவித்தனர். அதன் பேரில் கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீசார் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். இதில் அங்கு வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும், அது புரளி என்பதும் தெரியவந்தது.
செல்போன் சிக்னல்
அதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் சென்னை கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட செல்போன் எண்ணை வைத்து அதிரடி விசாரணை நடத்தினர்.
இதில், அந்த எண் கோவில்பாளையம் பகுதியில் இருப்பதாக செல்போன் சிக்னல் காண்பித்தது. உடனே அங்கு விரைந்து சென்ற கோவில்பாளையம் போலீசார் அந்த ஆசாமியை மடக்கிப் பிடித்தனர்.
தொழிலாளி கைது
விசாரணையில் அவர், கோவை கோவில்பாளையம் காபி கடை பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஸ்ரீதர் (வயது51) என்பதும், அவர், குடிபோதையில் மனைவியிடம் சண்டை போட்டு விட்டு டாஸ்மாக் கடைக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்ததும் தெரிய வந்தது.
உடனே கோவில்பாளையம் போலீசார் ஸ்ரீதர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். டாஸ்மாக் மதுக்கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தொழிலாளி கைதான சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.






