மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளி கைது


மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளி கைது
x

நாமகிரிப்பேட்டை அருகே மூதாட்டி கொலை வழக்கில் தொழிலாளியை கைது செய்தனர். பணத்துக்காக கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாமக்கல்

ராசிபுரம்

மூதாட்டி கொலை

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் தாலுகா, நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ராஜாபாளையம் வணங்காமுடி தோட்டத்தைச் சேர்ந்தவர் பாவாயி (வயது 66). இவரது கணவர் பொன்னுசாமி. சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் அபுதாபில் வேலை பார்த்து வருகிறார். இதையொட்டி பாவாயி வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் தனிமையில் வசித்து வந்த பாவாயி கடந்த 9-ந் தேதி இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக ஆயில்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அப்போது அவரை கொலை செய்தது யார்? என்று தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் தடவியல் நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் துப்பறியும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் பேளுக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொலையாளிகளை பல இடங்களில் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று நாரைக்கிணறு பிரிவு ரோடு கசாப்புகாரர் சுந்தரம் என்பவது தோட்டத்தில் இருந்த செந்தில் (38) என்ற தொழிலாளியை சந்தேகத்தின்பேரில் கைது செய்தனர்.

பரபரப்பு வாக்குமூலம்

கார்கூடல்பட்டி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த அரப்புளி என்பவரது மகன் செந்தில். தற்போது சுந்தரத்தின் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து செந்தில் விவசாயம் செய்து வந்தார். இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பாவாயி மரவள்ளிக் கிழங்கு அறுவடை செய்துள்ளார். எனவே அவர் பணம் வைத்திருப்பார் என்றும் அந்தப் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக செந்தில் முடிவு செய்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் பணம் இல்லாததால் ஆத்திரம் அடைந்த செந்தில் பாவாயியை கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றதாக வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட செந்தில் ஏற்கனவே மெட்டாலா கூட்டுறவு வங்கி திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர் என்று போலீசார் தெரிவித்தனர். இவரிடமிருந்து ரூ.1,200 மற்றும் டூல்ஸ் பாக்ஸ், கியாஸ் சிலிண்டர், கடப்பாரை, மொபட் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட செந்திலை நீதிமன்ற காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

பணத்துக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story