1 கிலோ கஞ்சாவுடன் தொழிலாளி கைது
1 கிலோ கஞ்சாவுடன் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக காரில் நாமக்கல் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி சென்று சிலர் விற்பனை செய்து வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேலம் மாவட்ட போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பாபு சுரேஷ்குமார் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், செல்வம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் திருச்செங்கோடு மோர்பாளையம் கோழிக்கால் நத்தம் பகுதியில் ஒருவரை பிடித்து சந்தேகத்தின்பேரில் விசாரித்தனர். விசாரணையில், அவரிடம் 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும், பரமத்திவேலூர் அருகே கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (வயது 37) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே கடந்த மாதம் ஆந்திர மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டிற்கு காரில் 21 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற ராஜா (30) என்பவரை சங்ககிரி சுங்கச்சாவடியில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவருக்கும், வெங்கடேசன் என்பவருக்கும் இடையே கஞ்சா கடத்தலில் தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால் வேறு நபருக்கு கஞ்சா கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.