சேலம் கன்னங்குறிச்சியில் மரம் அறுக்கும் மில்லில் தொழிலாளி அடித்துக்கொலை
சேலம் கன்னங்குறிச்சியில் மரம் அறுக்கும் மில்லில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னங்குறிச்சி:
பிணமாக கிடந்தார்
சேலம் பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அருள். இவர் கோரிமேட்டில் இருந்து கன்னங்குறிச்சி செல்லும் பாதையில் மரம் அறுக்கும் மில் நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் மில்லில் விளக்கு போடுவதற்காக அருள் அங்கு வந்தார்.
அப்போது மில்லுக்குள் 45 வயதுடைய ஆண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீஸ் உதவி கமிஷனர்கள் செல்வம், லட்சுமி பிரியா, இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், சிவகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
கட்டையால் அடித்துக்கொலை
போலீசார் நடத்திய விசாரணையில், மரம் அறுக்கும் மில்லில் இறந்து கிடந்தது செட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ரஞ்சித்குமார் (வயது 45) என்பது தெரிய வந்தது. அவர், மனைவி, குழந்தைகளை பிரிந்து கோரிமேடு பகுதியில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் அங்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்து சிறிது தூரம் வரை ஓடி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
போலீசார் தீவிர விசாரணை
தொடர்ந்து ரஞ்சித்குமாரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரஞ்சித்குமார் எதற்காக கொலை செய்யப்பட்டார்?, அவரை கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் ரஞ்சித்குமாரின் இடது கையில் ராஜம்மாள் என பச்சை குத்தியுள்ளார். இது யாருடைய பெயர் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.