கட்டையால் அடித்து தொழிலாளி கொலை
கட்டையால் அடித்து தொழிலாளி கொலை
சூலூர்
சூலூர் அருகே தொழிலாளியை கட்டையால் அடித்து கொலை செய்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விசைத்தறி தொழிலாளி
கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அரசூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (வயது40). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா (35).
அதே பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (50). அவருடைய மனைவி தாமரை (40). இந்த 2 பேரின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று ரங்கசாமி வீட்டின் கதவை கோவிந்தராஜ், தாமரை ஆகியோர் தட்டினர். அந்த சத்தம் கேட்டு ரங்கசாமி கதவை திறந்தார்.
உடனே இருவரும், இரவு நேரத்தில் எதற்காக எங்கள் வீட்டின் கூரை தட்டியை தட்டி விட்டு சென்றாய் என்று கேட்டு உள்ளனர்.
கட்டையால் அடித்துக்கொலை
இதனால் ரங்கசாமிக்கும், கோவிந்தராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், அவரது மனைவி தாமரை ஆகியோர் சேர்ந்து அங்கு கிடந்த மரக்கட்டையை எடுத்து ரங்கசாமியை சரமாரியாக தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்து அவர் அலறி துடித்தார். அந்த சத்தம் கேட்டு ரங்கசாமியின் மனைவி சித்ரா வந்து பார்த்து கதறி அழு தார். இது குறித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் விரைந்து வந்து ரத்த வெள்ளத்தில் கிடந்த ரங்கசாமியை பரிசோ தனை செய்தனர். இதில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.
கணவன்-மனைவி கைது
இது குறித்த புகாரின் பேரில் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்த ராஜ், அவருடைய மனைவி தாமரை ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.